பூஜை அறையில் சுவாமி படங்களோடு முன்னோர் படங்களை சேர்த்து வைக்கலாமா?
கூடாது. தனியாகத்தான் வைக்க வேண்டும். அப்படியே வைக்க வேண்டும் என்று சொன்னால், தெய்வப் படங்களுக்கு கீழேதான் வைக்க வேண்டும். அதைவிட
வெளியில் ஹாலில் வைப்பது நல்லது.
? சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றலாமா?
– கௌரி, மயிலாப்பூர்.
கூடாது. பரிகாரமாகச் செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கு உரிய கோயில்களில்தான் செய்ய வேண்டும்.
? தினசரி காலையில் எழுந்தவுடன் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்?
– சௌமியாவரதராஜன், காரைக்கால்.
அஷ்ட மங்கலங்கள் என்று எட்டு பொருள்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். பொதுவாகவே நம் மனதுக்கு எது நிம்மதியையும் அமைதியையும் தருகிறதோ அந்த மாதிரியான பொருள்களை நாம் பார்க்க வேண்டும். கோயில் கோபுரம், தெய்வங்களின் திருவுருவங்கள், புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம் வீணை, மிருதங்கம் முதலிய வாத்தியக் கருவிகள், கன்றுடன் கூடிய பசு, உள்ளங்கை, தாய் தந்தை மனைவி குழந்தைகள், மகான்களின் படங்கள் ஆகியோர் காலையில் எழுந்தவுடன் பார்க்கத் தகுந்தவர்கள். உங்களுக்கு யாராவது உதவி செய்திருந்தால், அந்த உதவி செய்தவரை ஒரு கணம் நினைத்துக் கொள்ளுங்கள்.
? பகவானை காட்டிலும் குரு பெரியவர் என்கிறார்களே?
– புருஷோத்தமன், குணசீலம்.
அப்படிதான் நம் சாஸ்திரங்களும், சாஸ்திர அனுபவங்களும் சொல்கின்றன. ஈசுவரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம். காரணம் ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியச்சமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் குருதான். ஒரு நல்ல குரு நமக்குக் கிடைத்துவிட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. இன்னொரு விஷயம் குரு கிடைப்பதும், பகவானின் கருணையில்தான். அவன் தானே வராமல் குரு மூலமாக நம்மை வழிநடத்தி ஆட்கொள்கிறான்.
? வீட்டில் தெய்வப் படங்களை எந்த திசையில் வைக்கலாம்?
– காமாட்சி சுந்தரம், தர்மஸ்தலா – கர்நாடகா.
மிகவும் உயரமான இடத்தில் வைக்க வேண்டியது இல்லை. காரணம் புஷ்பங்கள் வைப்பதற்கு கஷ்டமாக இருக்கும். கிழக்கு திசையை நோக்கி வைப்பது சாலச் சிறந்தது. தெற்கு திசை மட்டும் வேண்டாம். உங்கள் வீட்டின் அமைப்பை பொறுத்து தெற்கு தவிர்த்த மற்ற திசைகளை நீங்கள் சுவாமி படங்களை மாட்டி வைக்கலாம்.
? வீட்டு வாசலில் என்றைக்கு கோலம் போடக் கூடாது?
– ஆர்.கோகுலராணி, திருப்பூர்.
பிதுர் தேவதைகள் (நமது மறைந்த முன்னோர்) நம்முடைய வீட்டுக்கு வரும் தினங்களில் வாசலில் கோலம் போடும் பழக்கமில்லை. ஆனால், பூஜை அறையில் கோலம் போடலாம். பிதுரர்கள் மாதாமாதம் அமாவாசை அன்று வருவதாக ஐதீகம். ஆகையினால், அன்று கோலம் போட மாட்டார்கள். அதே போல, நம் வீட்டில் நீத்தார் நினைவு தினமாகிய திவசம் (சிராத்தம்) அனுஷ்டிக்கும் பொழுது, வீட்டு வாசலில் அன்றைக்கு மட்டும் கோலம் போடும் வழக்கம் இல்லை.
?சில நாட்களில் எண்ணெய் குளியல் கூடாது என்கிறார்களே?
– பாரதி, சென்னை.
ஆம். எண்ணெய் குளியலுக்கு என்று சில நாட்கள் உண்டு. பொதுவாக ஆடவர்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். பெண்களுக்கு வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உண்டு. அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, ஜென்ம நட்சத்திரம் மற்றும் விரத தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் இல்லை.
? வீட்டில் ஆன்மிக ரீதியாக அனுஷ்டிக்க வேண்டிய விதிகள் உண்டா?
– என்.கல்யாணி, வாடிப்பட்டி – மதுரை.
நிறைய விதிகள் உண்டு. அதில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது சில.
1. நீராடிவிட்டுதான் பூஜை அறைக்குள் செல்ல வேண்டும்.
2. அதைப் போலவே நெற்றிக்கு திலகம் இடாமல் பாழ் நெற்றியோடு பூஜை செய்வது கூடாது. குறிப்பாக பெண்கள் தலைவாரி நெற்றிக்கு திலகமிடாமல் அவசர
அவசரமாக தீபம் ஏற்றக்கூடாது.
3. பெண்களைப் பொறுத்தவரையில் வழிபாட்டில் பூசணிக்காயை உடைக்க கூடாது.
4. இரு கைகளால் தலையை எப்பொழுதும் சொரிந்து கொண்டிருக்ககூடாது.
5. தலைவாரிய கேசம் ஆங்காங்கு சிதற கூடாது.
6. விளக்கு ஏற்றிய பின் தலைவாரக் கூடாது.
7. கர்ப்பிணிப் பெண்களாக இருந்தால், தேங்காய் உடைக்க கூடாது.
இப்படி சில விதிகள் இருக்கின்றன. மற்றவற்றை குடும்ப பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அனுஷ்டிப்பது நல்லது.
? கற்ற கல்விக்கும் கற்காத கல்விக்கும் என்ன வேறுபாடு?
– பா.பரத்கிஷோர், மேலூர் – திருச்சி.
கற்ற கல்வி கற்றவரைதான் பதில் கிடைக்கும். பகவத் பிரசாதமாக வரும் கல்வி என்றைக்கும் கை கொடுக்கும். ஞான சம்பந்தர் மூன்று வயதில் கவி பாடியது அவன் தந்த கல்வியால். நம்மாழ்வார் பகவானை மயர்வற மதி நலம் அருளியவன் என்கிறார். பாஸ்கரராயர் என்று ஒரு சக்தி உபாசகர் இருந்தார். லலிதாசகஸ்ர நாமத்துக்கு முதலில் உரை எழுதியவர். இவர் ஒரு முறை காசிக்கு சென்றார். அங்கே குங்குமானந்தர் என்ற மஹான் இருந்தார். அம்பாளின் பூர்ண அனுக்கிரகம் பெற்றவர் என்பது அவருக்குத் தெரியும்.
இது தெரியாத சில பண்டிதர்கள், வாதத்துக்கு அழைத்தனர். ஒரு நல்ல நாளில் வாதம் தொடங்கியது. முதலில் சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷதங்களிலிருந்து விவாதிக்கப்பட்ட அனைத்திற்கும் அநாயாசமாக பதிலளித்தபடி இருந்தார். இவர் கூறும் பதிலைக் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினர். இவ்வளவு சுலபமாக பதில் அளிக்கின்றாரே, கொஞ்சம் கடினமான கேள்வியாகக் கேட்போமே என்று அந்தப் பண்டிதர்கள், ஸகஸ்ரநாமத்திலுள்ள 237வது நாமத்திலுள்ள, ‘‘மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா’’ என்ற நாமத்திலுள்ள அறுபத்து நான்கு கோடி யோகினீ தேவதை களின் பெயர்கள், உற்பத்தி, அவற்றின் முழு சரித்திரத்தையும் சொல்ல முடியுமா என்று கேட்டுவிட்டு இவர் எப்படி பதில் சொல்லப் போகிறார் என்று அகங்காரமாக அமர்ந்தனர். பாஸ்கரராயர் கண்களை மூடினார்.
உள்ளிருந்து அம்பாள் சிரித்தாள். இதோ சொல்கிறேன் என அவர் ஒவ்வொரு யோகினியின் பெயர்களையும் சொல்லத் தொடங்கினார். நீங்கள் முடிந்தால் எழுதிக் கொள்ளுங்கள் என்றும் கட்டளையிட்டார். மடைதிறந்த வெள்ளம்போல அறுபத்து நான்கு கோடி யோகினிகளின் பெயரும் வந்தபடி இருந்தன. அந்தப் பண்டிதர்களால் எழுதமாளாது சோர்வுற்றனர். என்ன செய்வது என்று திகைத்து நின்றனர்.
இறுதியில் குங்குமானந்தரே அந்த பண்டிதர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். ‘‘பண்டிதர்களே… உங்களால் இவரை வெல்ல முடியாது. இவர் அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெற்ற உபாசகர். இவரின் தோளில் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அவளே பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்’’ என்று சொன்னதோடு மட்டுமல்லாது குங்குமானந்தர் அபிஷேக தீர்த்தத்தை அவர்கள் கண்களில் தெளித்து, இப்போது அவரைப் பாருங்கள் என்று சொன்னார். அவர்கள் பார்க்கும்போது அம்பாள் அவரின் தோளின் மீது அமர்ந்திருந்தாள். அவர்களும் தரிசித்தனர். இப்போது பாஸ்கரராயருக்கு துணை நின்ற கல்வி கல்லாத கல்வி. தெய்வத்தால் கிடைத்த ஞானம்.
? மரம் செடி கொடிகளை இப்பொழுது நாம் கண்ணால்கூட பார்க்க முடியவில்லையே?
– வி.எஸ்.முத்துகுமரன், பாப்பாரப்பட்டி.
வாஸ்தவம்தான். விருட்ச தரிசனம் வினைகளைப் போக்கும் என்பார்கள். ஆனால், நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து விட்டோம். நகரங்களில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டடங்களும் தண்ணீர் உள்ளே போக முடியாத தார் சாலைகளும் தான் இருக்கின்றன. வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. இது தவிர்க்க முடியாதது என்றாலும்கூட இபொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை நம்முடைய வீட்டின் பால்கனி போன்ற பகுதிகளிலோ சிறிய வீடாக இருந்தாலும் மாடியில் கிழக்குப் பகுதிகளில் துளசி செடி மற்றும் சிறு கொடி தாவரங்கள் போன்றவற்றை வளர்க்கலாம்.
துளசி, வில்வம், புஷ்ப செடிகள் இவற்றை பார்க்கும் போது நம்முடைய மனது தெளிவு பெறும். அது மட்டுமல்ல, நம் வீட்டு மலர்களை நம் கையால் பறித்து இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்வது என்பது விலை கொடுத்து வாங்கும் மலர்களைவிட சிறப்பான வழிபாடு. குறைந்தபட்சம் சுற்று சுவரை ஒட்டி செவ்வரளி செடிகளைச் வளர்க்கலாம். அதற்கு பெரிய அளவில் இடம் தேவை கிடையாது.
? இப்போது உதவிகூட ஏதாவது எதிர்ப்பார்த்து தானே செய்கிறார்கள் இந்நிலையில் பிரதி பலன் பாராது உதவுவது நடை முறைக்கு சரியாக வருமா?
– சிவக்குமார், தேவிப்பட்டினம்.
இதற்கு நேரடியாக பதில் சொல்வதைவிட இந்தச் சிறிய கதை நன்றாகப் புரிய வைக்கும். படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.
பெயின்டருக்கோ அதிர்ச்சி. ‘‘நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே?’’ எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.
‘‘இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு’’ என்றார் படகின் உரிமையாளர். ‘‘இல்லை சேர்… அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்’’ என்றார் பெயின்டர்.
‘‘நண்பரே… உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்’’ என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.‘‘நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.
நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக் கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் ‘சிறிய’ நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது.’’ என்றார்.
யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.
? பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?
– நாகவல்லி, தாராபுரம்.
பூஜை அறை தூய்மையாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் பூட்டு வைத்து அடைக்கக் கூடாது. காற்றோட்டமாக இருக்க வேண்டும். அதனால் பூஜை அறையை வடகிழக்கில் அமைக்கச் சொல்லி, அந்த பகுதி ஜன்னல் திறப்புக்குகள் வைத்து காற்றோட்டமாகப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது அது இருட்டு அறையாக இருக்கிறது. பலர் தேவையில்லாத பொருள்களை எல்லாம் அந்த ஒரு அறைதான் இருக்கிறது என்பதற்காக போட்டு விடுகின்றார்கள்.
அது இறையாற்றலைக் குறைக்கும். அதே போல உடைந்த பொருட்களை எல்லாம் கொண்டு போய் பூஜை அறையில் வைக்க கூடாது. நிறைய படங்களும் பூஜை அறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து (அல்லது சிறிய விக்கிரகங்களைத் தேர்ந்தெடுத்து) பூஜை அறையில் வைத்து முறையாக பூஜை செய்தால், அதனுடைய பலன் அதிகம்.
தொகுப்பு: தேஜஸ்வி