ஓசூர்: ஜெர்மனியில் இன்ஜினியராக வேலை பார்த்தவர், கிராம வழக்கப்படி ஓசூரில் கார் திருடியபோது கைது செய்யப்பட்டார். ஓசூர் அப்பாவு நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (42), கார் டிரைவர். இவர் தனது காரை கடந்த 7ம் தேதி தளி சாலை அருகே நிறுத்தினார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, காரை காணவில்லை. இதுகுறித்து ஓசூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வெகுநேரம் நோட்டமிட்டு ஒரு வாலிபர் காரை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சையத் அலி (32) என்பவர் காரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், கைதான சையத் அலி, ஜெர்மனியில் பொறியியல் படிப்பு படித்ததும், சொந்த ஊர் வழக்கப்படி திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. ஓசூர் அருகே காரை திருடிச் சென்ற போது சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.