சென்னை: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங்கில் மலை சுழற்சி மற்றும் பணி நிரவலில் எங்கள் கோரிக்கையை ஏற்று விருப்பம் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கி மாறுதல் கவுன்சலிங் நடத்த உத்தரவிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும், தொடக்க கல்வி இயக்குநருக்கும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றி தெரிவித்துக் ெகாள்கிறோம்.
தொடக்க கல்வித்துறையில் 100 நாள் சவால் என்கிற திட்டத்தை அறிமுகம் செய்து 4552 பள்ளிகள் இந்த சவாலில் பங்கேற்று அடிப்படை வாசிப்பு, அடிப்படைத் திறன்களை வெளிப்படுத்துதல் என்கிற இலக்கில் வெற்றி கண்டுள்ள பள்ளிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறோம். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து அரசுப் பள்ளிகள் வறுமையின் சின்னம் அல்ல; அவை பெருமையின் சின்னம் என்று இலக்கை நோக்கி செலுத்துகிறார் அமைச்சர். இதுபோன்ற செயற்பாடுகளால் தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கிய இடத்தை பள்ளிக் கல்வித்துறை பிடித்துள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடக்கும் முப்பெரும் விழா வெற்றி பெற தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.