திருச்சி: பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என மமக இளைஞரணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பீமநகரில் நேற்று நடைபெற்றது. இளைஞர் அணி மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றதை போன்று, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தி அனைத்து மக்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும். பாலஸ்தீன் காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அத்துமீறலால் இதுவரை 40,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேலோடு வர்த்தக ரீதியான தொடர்பு என்ற பெயரில் ஆயுதங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகிறது. அதனை உடனடியாக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் சில பகுதிகளில் என்ஐஏ தொடர்ந்து அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து விசாரனை என்ற பெயரில் அத்துமீறி வருகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். சிறுபான்மையினரின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் கொண்டு வரப்படும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.