நியூயார்க் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 509க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் காசா போருக்கு எதிராக மீண்டும் ரஷ்யா தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. அல் அஹ்லி மருத்துவமனை தாக்கி தகர்க்கப்பட்டதை எப்போதும் மன்னிக்க முடியாது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த போர் குற்றத்திற்கு இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கனவே நேற்று ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது.
அதில் ஹமாஸ் பயங்கரவாத குழு குறித்து எதுவும் குறிப்பிடப்படாமல் தீவிரவாத தாக்குதலை மட்டும் கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானத்துக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிராக வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ரஷ்யா புதியதாக மேலும் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.