நியூயார்க் : காசா மீது தரை மற்றும் வான்வழியாக இஸ்ரேல் விடிய விடிய குண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறி உள்ளது. தெற்கு இஸ்ரேல் பகுதி மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த போர் தற்போது 3வது வாரமாக நீடிக்கிறது.நேற்று முன்தினம் முதல் முறையாக காசா நகருக்குள் பீரங்கி படைகளுடன் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், அதன் தரைவழி தாக்குதலை தொடங்கியது. அதே நேரம், காசா பகுதி முழுவதும் 250க்கும் மேற்பட்ட வான்வெளி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதிகளில் இருந்த பல அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. இதுவரை காசாவில் மட்டும் 7000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று கவலை தெரிவித்துள்ள ஐ.நா. மனிதாபிமான உதவிகள் வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதற்காக ஐ.நா.வில் ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தில் காசாவில் முடக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கான அவசர தேவையை உணர்ந்து, மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்ந்தன.இதையடுத்து இந்த தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானம் வெறுக்கத்தக்க வகையில் இருப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.