நன்றி குங்குமம் டாக்டர்
சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு அறிமுகமானவர் நடிகர் கவின் ராஜ். இவர், கல்லூரி காலத்தில் இருந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு, ஊடகங்களில் நடிக்க முயற்சிகள் எடுத்து, பின்னர் நண்பர்களின் குறும்படங்கள் மூலம் நடிக்க ஆரம்பித்தவர். அதன்பின்னர் ஒரு நாடகப் பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்துள்ளார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடர்தான் இவரது முதல் திரைப்பயணம். அதன்பிறகு, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். இதன்மூலம் பெரியதிரையில் வாய்ப்புக்கிட்ட பீட்சா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், 2017-ஆம் ஆண்டு சத்ரியன் திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு, 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து திரைப்படங்களின் வாய்ப்புகள் வர நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அதையடுத்து, வினித் வர பிரசாத் இயக்கத்தில் லிப்ட், கணேஷ்.கே. பாபு இயக்கத்தில் டா டா, இளன் இயக்கத்தில் ஸ்டார், சமீபத்தில் சிவ பாலன் முத்துக்குமார் இயக்கத்தில் வெளியான பிளடி பக்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, அருண்.கே இயக்கத்தில் ஊர்க்குருவி படத்தில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின் தனது ஃபிட்னெஸ் ரகசியங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை.
ஒர்க்கவுட்ஸ்: எப்போது சினிமாவுக்குள் வர வேண்டும் என்று நினைத்தேனோ அது முதலே ஒர்க்கவுட்ஸ் மீது ஈடுபாடு அதிகமாகிவிட்டது. அதிலும் இப்போது நடிகனாக இருப்பதால், என்னை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். எனவே, தினசரி ஜிம் சென்று ஒர்க்கவுட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். பயிற்சி முடித்ததும் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் யோகா செய்வேன். எனது ரொட்டீனில் ஒருநாள் ஒர்க்கவுட்டோ யோகாவோ தவறினாலும் அந்த நாள் முழுவதுமே எனக்கு சரியாக போகாத மாதிரியே இருக்கும். மேலும், நான் ஃபுட்டி என்று சொல்லலாம். உணவில் எந்த காம்ப்ரமைஸும் என்னால் செய்ய முடியாது. அதனால், ஒர்க்கவுட் மூலம்தான் அதை சரி செய்கிறேன்.
எனது தினசரி பயிற்சிகளில் கட்டாயம் கார்டியோ பயிற்சிகள் இருக்கும். அதைத் தொடர்ந்து எடையை நிர்வகிக்கும் பயிற்சிகள், தசைகளை வலிமையாக்கும் சில பயிற்சிகளையும் வழக்கமாக மேற்கொண்டு வருகிறேன். அதைத் தவிர்த்து புல் – அப்ஸ், புஷ் – அப்ஸ் மற்றும் கால்களை வலுவூட்டும் சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறேன். இதுதவிர, சைக்கிளிங், நடைப்பயிற்சியும் உண்டு.
பொதுவாக நான் ஒர்க்கவுட் ஜிம் என்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கிய பிறகுதான் அதன் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது. எனவே, ஒவ்வொருவருமே தினசரி சிறிது நேரமாவது ஏதேனும் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உதவும். இதனால், கொரோனா மாதிரி எந்தவொரு தொற்று வந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
டயட்: நான் முன்பே சொல்லிவிட்டேன், நான் தீவிர ஃபுட்டி என்று. என்னிடம் இருக்கும் ஒரே கெட்ட பழக்கமும் இதுதான். என்னால் பிரியாணி சாப்பிடாமல் இருக்கவே முடியாது. அந்தளவு பிரியாணி பிரியன் என்று சொல்லலாம். அதுபோன்று ஸ்வீட்ஸும் விரும்பி சாப்பிடுவேன். எனவே, என்னைப் பொருத்தவரை டயட் என்பது ஆரோக்கியமான பேலன்ஸ் உணவை உண்டாலே போதுமானது என்று நினைக்கிறேன்.
அதேசமயம், ஒரு படத்தில் கமிட் ஆகும்போது, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன உடலமைப்பு தேவைப்படுகிறதோ அதற்கேற்றவாறு அந்தப் படம் முடியும் வரை டயட்டை ஃபாலோ செய்கிறேன். ஏனென்றால் என்னை நம்பி ஒரு படத்தை கொடுக்கும் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளருக்கு உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா. மற்றபடி பொதுவாக எனது தினசரி டயட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் சம அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். அதுபோன்று சமீபகாலமாக எனது நியூட்ரிஷியன் அறிவுரைப்படி வெள்ளை சர்க்கரை, மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்த்து வருகிறேன். இனிப்புகளிலும் கருப்பட்டி, வெல்லம் கலந்த இனிப்புகளையே எடுத்துக் கொள்கிறேன். இவ்வளவுதான் என்னுடைய ஃபிட்னெஸ் ரகசியங்கள்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்