இங்கிலாந்துடன் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் இளம் கேப்டன் சுப்மன் கில் 269 ரன் குவித்து, இங்கிலாந்து அணிக்கு பெரியளவில் சவால் எழுப்பினார். இதன் மூலம், இங்கிலாந்தில், 1979ம் ஆண்டில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்டில் 221 ரன் குவித்து, இந்திய அணி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் படைத்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோர் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
தவிர, இந்திய கேப்டனாக கடந்த 2019ல், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி அதிகபட்சமாக அடித்த 254 ரன் சாதனையையும் கில் தகர்த்துள்ளார். இந்தியாவுக்கு வெளியே அதிக ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கடந்த 2016ல், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 200 ரன் குவித்து விராட் கோஹ்லி அரங்கேற்றி இருந்தார். அந்த சாதனையும், கில்லின் அதிரடியால் தவிடுபொடியாகி உள்ளது. வெளிநாட்டில் நடக்கும் போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய 2வது இந்திய கேப்டனாக, கோஹ்லிக்கு பின், கில் திகழ்கிறார்.