சென்னை: ஒன்றிய அரசின் காஸ் விலை குறைப்பு என்பது தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறியை காட்டுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் எஸ்.ஆர்.பி.கோயில் வடக்கு பிரதான சாலை மற்றும் தெற்கு பிரதான சாலை, ஜவஹர் நகர் முதல் பிரதான சாலை ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் மின்மாற்றி இருக்குமிடத்தை சுற்றி பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு பிரதான சாலையில் மின்மாற்றியினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் ரூ15.40 கோடியில் பல்லவன் சாலையில் பெரியார் நகர், ஜவஹர் நகர் மற்றும் ஜி.கே.எம். காலனி ஆகிய பகுதிகளுக்கு 1110 மீட்டர் நீளத்திலும், ரூ.1.25 கோடி செலவில் எஸ்.ஆர்.பி.கோயில் (வடக்கு), ராமமூர்த்தி காலனியிலிருந்து பல்லவன் சாலை வரை 175 மீட்டர் நீளத்திலும், ரூ.1.75 கோடி செலவில் ஆண்டாள் அவென்யூ பகுதியிலிருந்து பல்லவன் சாலை வரை 465 மீட்டர் நீளத்திலும், என மொத்தம் ரூ.18.40 கோடி செலவில் 1,750 மீட்டர் நீளத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, வி.வி. நகர் 2-வது தெரு பூங்காவில் ரூ.15 லட்சம் செலவிலும், பூம்புகார் நகர் 4-வது தெரு பூங்காவில் ரூ.26 லட்சம் செலவிலும், பெரியார் நகர் 29வது தெரு பூங்காவில் ரூ.26 லட்சம் செலவிலும், ஜவஹர் நகர் 5வது பிரதான சாலை பூங்காவில் ரூ.28 லட்சம் செலவிலும், செல்வி நகர் 5வது தெரு விளையாட்டு மைதானத்தில் ரூ.14 லட்சம் செலவில் என மொத்தம் ரூ. 1.9 கோடிசெலவில் 4 பூங்காக்கள் மற்றும் 1 விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த பூங்காக்களில் 5 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படுவதுடன், பசுமையான செடிகள், புல்வெளிகள், சுற்றுச்சுவர், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர்வசதி, பாதுகாவலர் அறை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படும். அதேபோல, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை முதல்வர் பார்வையிட்டு அங்கு மாணவ, மாணவியர்களுக்கு டாலி பயிற்சி வகுப்புகள், பெண்களுக்கு தையற் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தினையும் முதல்வர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து, கொளத்தூர், ஹரிதாஸ் சாலையில் சென்னை மாநகராட்சியின் தாமரை குளம் பூங்காவை முதல்வர் பார்வையிட்டு அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதனையடுத்து, நீர்வளத்துறையின் சார்பில் ரூ.91.36 கோடி செலவில் சென்னை – மாதவரம் மற்றும் அயனாவரம் வட்டங்களில் அமைந்துள்ள தணிகாசலம் நகர் கால்வாயில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிகள் மற்றும் கொளத்தூர், நேர்மை நகரில் ரூ.2.50 கோடி செலவில் 758.10 சதுர மீட்டர் பரப்பளவில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மண்டல உதவி ஆணையர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், நிருபர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்:
இந்தியா கூட்டணி 28 கட்சிகளுடன் உயர்ந்திருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
அது இன்னும் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஒன்றிய அரசின் காஸ் விலை குறைப்பு, இந்தியா கூட்டணிக்கான நெருக்கடியா?
இல்லை, இல்லை, அது தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி.
பெட்ரோல், டீசல் விலை கூட குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
ஆச்சரியமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சக்கரபாணி, பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, சுதர்சனம், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் பூஜா குல்கர்னி, நகர் ஊரமைப்பு இயக்குநர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.