சேலம்: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.1,823.50க்கு விற்கப்படுகிறது.இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. இதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் ரூ.50 அதிகரிக்கப்பட்டு, டெல்லியில் ரூ.853, மும்பையில் ரூ.852.50, கொல்கத்தாவில் ரூ.879, சென்னையில் ரூ.868.50க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஜூலை மாதத்திற்கான புதிய விலை பட்டியலை நேற்று காலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.
அதன்படி தொடர்ந்து 3வது மாதமாக, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.57.50 முதல் ரூ.58.50 வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,881 என இருந்தது நேற்று ரூ.57.50 குறைந்து ரூ.1,823.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ரூ.1,830ல் இருந்து ரூ.58 குறைந்து ரூ.1,772 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.58.50 குறைந்து ரூ.1,665 ஆக விற்கப்படுகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், நடப்பு மாதத்தில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மட்டும் குறைக்காமல் உள்ளனர்.