சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு ஒரு கிலோ ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனை கடைகளிலும் விலை மேலும் அதிகரிக்க கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை கடையில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.280க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.320க்கு விற்பனையானது.
இந்நிலையில், ஒரே நாளில் ரூ.20 அதிகரித்து இருப்பதால் சில்லறை விற்பனை கடைகளில் மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வெங்காயம் நேற்றை விட ரூ.5 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60க்கும், கேரட் ரூ.10 உயர்ந்து ரூ.90க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் பீன்ஸ் விலை ரூ.5 குறைந்து கிலோ ரூ.85 ஆகவும், அவரைக்காய் ரூ.10 குறைந்து ரூ.60 ஆகவும் உள்ளது. எலுமிச்சை விலையும் ரூ.10 குறைந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ரூ.25க்கும், உருளைக்கிழங்கு ரூ.45க்கும், சின்னவெங்காயம் ரூ.75க்கும் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.