திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் நகராட்சிக்கு உட்பட்ட தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் டன்னுக்கு மேலாக குப்பை கழிவுகள் குவிந்திருக்கும் நிலையில், அந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று நகராட்சி தரம் பிரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை இரண்டு லாரிகளில் ஏற்றிவந்து ஒரு லாரியில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளான முககவசம் கையுறை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி கப்புகள் உள்பட பல்வேறு பொருட்களையும் கொட்டி தெரியாமல் இருப்பதற்காக ஜே.சி.பி. எந்திரத்தை வைத்து அதன் மேல் குப்பைகளை போட்டு மறைத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பத்திரிகையாளர்கள் சென்றபோது மற்றொரு லாரியில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதற்கு வந்த லாரி டிரைவர்கள் ட்ரெய்லரை மூடிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்ட
னர்.பொதுமக்கள் கூறுகையில், “குப்பை கிடங்கு பிரதான சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை தலக்காஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரிக்காமல் இருக்கும் நிலையில் மேலும் மருத்துவ கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டுவந்து கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இவற்றை தடுக்க வேண்டும். அடிக்கடி குப்பைகளை கொளுத்துவதால் மூச்சு திணறல், சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்’ என்றனர்.