ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரங்களில் குப்பைகள், உணவு கழிவுகள் தேங்கியுள்ளதால் வனவிலங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் குப்பைகளை சேகரிக்க நகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் வருகின்றனர்.ஆனால், அவர்கள் முறையாக வராத நிலையில் பெரும்பாலான மக்கள் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை சாலையோரங்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் வீசிவிட்டு செல்கின்றனர்.
அதேபோல், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிலும் பெரும்பாலான மக்கள் உணவு பொருட்களை எடுத்து வந்து சாலையோரத்தில் சாப்பிட்டு விட்டு, அவைகளை அங்காங்கே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனை உட்கொள்வதற்காக தற்போது காட்டு பன்றிகள்,கரடிகள் மற்றும் சிறுத்தை போன்ற வன விலங்குகளும் ஊருக்குள் வரத் துவங்கிவிட்டன. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி,காட்டு பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், இவைகளை குதிரை மற்றும் கால்நடைகள் உட்கொள்வதால், அவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரங்களில் உள்ள முட்புதர்களுக்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.