நன்றி குங்குமம் டாக்டர்
உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா
நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் பொலிவினையும் கொடுக்கக்கூடிய மகத்தான உணவுகளில் ஒன்று கீரை. கீரைகளில் பலவகைகள் இருந்தாலும் அனைத்துமே நன்மைகளை அளிக்கக் கூடியது. அந்தவகையில் குப்பைக் கீரையும் ஒன்று. குப்பைக்கீரை தண்டுக்கீரை வகையைச் சார்ந்தவை. இது தமிழகமெங்கும் சாலை ஓரப்பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் மற்றும் வேளாண் நிலப் பகுதிகளிலும் காணப்படுகிறது. எங்கும் பரவலாகவும், இயல்பாகவும் கிடைக்கக்கூடிய இந்தக் கீரையில் சிவப்பு நிறத்தில் பூக்கள் இருக்கும். இந்தக் கீரையின் பெயரை வைத்து குறைவாக நினைக்க வேண்டியது இல்லை. இதன் பெயர் குப்பை கிடையாது. குப்பைகளில் வளர்ந்தாலும், குப்பை போன்ற உடலையும் தேற்றுவதால்தான் இதற்கு குப்பைக்கீரை என்று பெயர் வந்ததாம். குப்பைக்கீரைக்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு.
குப்பைக் கீரை, அமரேந்தேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் அமாரந்தஸ் ஸ்பினோஸிஸ். இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிடைக்கப்படுகிறது. மேலும் இலங்கை, ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் காணப்படுகின்றன. பெரும்பாலும் மழைக்காலங்களில் நன்கு வளர்ந்து காணப்படும். ஆனாலும் இக்கீரை அனைத்து வகையான தட்ப வெப்ப சூழலையும் ஏற்று வளரக்கூடிய சிறப்புடையது.
இக்கீரையில் நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும், தாவர மூலக்கூறுகளான டானின், சாப்போனின், பிளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், ஸ்டிராய்டுகள், பீனாலிக் அமிலங்கள் செறிந்து காணப்படுகின்றன.
மருத்துவ பண்புகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
சருமப் பொலிவினை மேம்படுத்த உதவும்.
ரத்தசோயை தடுக்கக்கூடியது.
நரம்பு மண்டலத்தை மேம்படுத்தக்கூடியது.
கெட்ட கொழுப்புகளை கரைத்து இதயத்தை மேம்படுத்த உதவுகிறது.
நுரையீரல் பிரச்னைகளை சீர்செய்கிறது.
மூளை செல்களின் செயல்பாட்டினைத் தூண்டி சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. மேலும் சோம்பலை விரட்டுகிறது.இரும்பு மற்றும் தாமிரச்சத்து நிறைந்து இக்கீரையில் உள்ளதால் ரத்தத்தை சுத்தம் செய்து சருமப் பொலிவினை கூட்டுகிறது. ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுவதினால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமான பிரச்னையை சீர்செய்ய உதவுகிறது.
வைட்டமின்கள் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்து உள்ளதால், நோயெதிர்ப்பு செயல்பாடு சற்று அதிகமாகவே இதில் இருக்கும்.தோல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. கண் பார்வை கூர்மையாகின்றன. உடற்சூடு தணிக்கிறது.சொறி சிரங்குகள் அகற்றுகிறது.நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நீக்குகிறது.
வயிற்றுப் புண்ணையும், வாய்ப்புண்ணையும் ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.இந்தக் கீரையில் இரும்புச்சத்தும், கால்சியமும் அபரிமிதமாகவே நிரம்ப உள்ளன. எனவே, ரத்தசோகை உள்ளவர்கள், அடிக்கடி இந்தக் கீரையை சாப்பிட்டால், ஹீமோகுளோபின் பிரச்னை தீரும்.அதேபோல, பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது இந்த குப்பைக்கீரை. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளதால், வயதான தோற்றம் தள்ளிப்போடப்படுவதுடன், இளமையான தோற்றத்தை நீடிக்க வைக்கிறது.
அளவுக்கு அதிகமான நார்ச்சத்துக்களை கொண்ட கீரை இதுவாகும். மலச்சிக்கல் இருந்தாலே, கீரையை சாப்பிட சொல்வார்கள். ஆனால், இந்தக் கீரையோ, செரிமானத்திற்கு பேருதவி புரிவதுடன், ஆரோக்கியமான குடலையும் பராமரிக்க உதவுகிறது. உடலில் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு இருந்தாலும், இந்தக் கீரையை அரைத்துத் தடவினால் கட்டிகள் கரைந்துவிடும். அதேபோல, உடலில் எங்காவது வீக்கம் ஏற்பட்டாலும், இந்தக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் குறைந்துவிடுமாம்.
நரம்பு மண்டலத்தை மேம்படுத்த, கண் பிரச்னை சரி செய்ய, வாய்ப்புண் பிரச்னையை குணமாக்க என பல்வேறு நன்மைகளை இக்கீரை கொடுக்க வல்லது. இத்தகைய நன்மைகளை தரக்கூடிய இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும். எதையும் பெயரை வைத்து குறைவாக நினைக்கக்கூடாது என்பதற்கு இக்கீரையில் உள்ள மருத்துவ பண்புகளே ஒரு உதாரணமாகும்.
இக்கீரையை சமைக்கும் முறைகள்
வழக்கமான கீரைகளை போலவே, இந்தக் கீரையையும் சின்ன வெங்காயம் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம் அல்லது துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கீரையின் நன்மைகளை பதார்த்த குணப்பாட நூலில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
குப்பைக் கீரை குளிரும்,
குருதிக்கண் தீயும்
சப்பை நோய்க்கு சாவும்,
சமனமாய் பாக்கும்
இளைப்பாற விளையும்
எளிதாகும் தோலும்
வளிமையே வரும்
வண்ணம் வாழ்விக்கும்
நோயும்.