குன்னூர் : குன்னூர் மையப்பகுதியில் செல்லும் ஆற்றிலேயே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூரின் சுற்றுவட்டார பகுதிகளான மாடல் ஹவுஸ், ரெய்லி காம்பவுண்ட், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ஆற்றோரங்களில் வீசப்படும் குப்பைகள் மவுண்ட் ரோட்டை கடந்து பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரதான ஆறுடன் கலக்கிறது.
இந்த ஆற்றில் நாளடைவில் மக்கள் கழிவுநீரை வெளியேற்றியதால், தற்போது இந்த ஆறு கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இந்நிலையில், விபி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை, பின்புறம் உள்ள ஆற்றில் கொட்டப்படுகின்றன. இவ்வாறு ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் பேருந்து நிலையத்திற்கு கீழ்புறம் உள்ள ஆற்றில் கழிவுகள் பெருமளவில் தேங்கியுள்ளன.
குறிப்பாக தடை செய்யப்பட்டுள்ள 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் போல் தேங்கி நிற்கின்றன. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் அபாயம் உருவாகி வருகிறது.
தற்போது, அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், ஆற்றில் ஏற்பட்டுள்ள அடைப்பால் பெருமளவில் துர்நாற்றம் வீசி வருவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேங்கிக்கிடக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் தூர் வாரி, தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.