*அகற்ற நடவடிக்கை தேவை
*பொதுமக்கள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் : தஞ்சை அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை, விளார், புதுப்பட்டினம் ஊராட்சிகளில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பெரிய ஊராட்சியாக விளங்கி வருகிறது.
இந்த ஊராட்சியில் மறியல், சிலோன் காலனி, மாதா கோட்டை, கூத்தன் சாரி, அதினாம்பட்டு, மேல வஸ்தாசாவடியில் ஒரு பகுதி, பிலோமினா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, போஸ்டல் காலனி, சீதா நகர், இ.பி. காலனி, கல்யாண சுந்தரம் நகர், ஜமால் உசேன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இதேபோல் விளார் ஊராட்சியில் காயிதே மில்லத் நகர், நாவலர் நகர், கலைஞர் நகர், புதிய பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
புதுப்பட்டினம் ஊராட்சியில் சேரன் நகர், தில்லை நகர், பாரதிதாசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த 3 ஊராட்சிகளிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள தினசரி வீடுகளில் சேரும் குப்பைகள், காய்கறி கழிவுகள், மாமிச கழிவுகளை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாததால் அந்தந்த சாலை ஓரங்களில் பொதுமக்கள் கொட்டி வருகின்றனர்.
இதனால் குப்பைகள் பல இடங்களில் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளை அப்புறப்படுத்தாததால் அந்த குப்பையில் மீது மாடுகள், பன்றிகள், நாய்கள் வந்து படுத்துக்கொண்டு அங்கு கிடக்கும் மாமிச கழிவுகள், காய்கறி கழிவுகளை உண்ணுகின்றன.
தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் வசித்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நாஞ்சிக்கோட்டை, விளார், புதுப்பட்டி னம் ஆகிய 3 ஊராட்சிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.