சென்னை: திருவள்ளூர் அருகே கஞ்சா போதைக்கு தம்பி அடிமையானதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்து, நாட்டு வெடிகுண்டு வீசி அண்ணன் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, போலீசார் 5 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர்கள் முகேஷ் (25), தீபன், ஜாவித். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு இரண்டு பைக்குகளில் வந்த மர்ம கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டை அவர்கள் மீது வீசினர்.
இதில், பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். மேலும், மர்ம கும்பல் மற்ற இருவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதில் தீபன் என்பவரின் கையில் வெடிகுண்டு பட்டதில் கை தோள்பட்டையில் பலத்த காயமும், மற்றொருவருக்கு தலையில் வெட்டு காயங்களும் ஏற்பட்டன. இதை பார்த்து அங்கிருந்தவர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்தததில் முகேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், கை தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த தீபனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார், நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. உயிரிழந்த முகேஷ் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்துள்ளார். இவரது தம்பி ஜீவா என்பதும், இவரது நண்பரான சின்ன மண்டலி கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (19) என்பவருடன் சேர்ந்து கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தம்பி ஜீவாவை கண்டித்து, ஆகாஷூடன் சேரவிடாமல் அண்ணன் முகேஷ் சிலிண்டர் போடும் பணிக்கு, தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேசுக்கும், ஆகாசுக்கும் இடையே சண்டை ஏற்பட்டபோது, ஆகாஷ் காதை முகேஷ் வெட்டி உள்ளார். இந்த வழக்கில் முகேஷ் உள்ளிட்ட 2 பேரை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சொந்த ஜாமீனில் விட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், பேரம்பாக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த முகேஷ் மற்றும் அவனது நண்பர்கள் தீபன், ஜாவித் உள்ளிட்ட 3 பேர் மீதும் மூன்று நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதில் முகேஷ் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று ஆகாஷ், ரியாஸ், சஞ்சய் உள்பட 5 பேரை கைது செய்து, திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி, இன்ஸ்பெக்டர் மாலா தலைமையில் மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கொலையாளிகளின் கைரேகைள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.