சென்னை: பூக்களுக்கிடையே கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த வழக்கில் கைதான இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கண்ணகி நகர் மயானம் அருகே 2019ம் ஆண்டு ஜூலையில் 31ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 26 வயதான நந்தகுமார் என்பவர் பூக்களை வைத்திருந்த குச்சி பைகளில், 2 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, நந்தகுமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.