புழல்: சோழவரம் அருகே நேற்றிரவு போலீசாரின் ரோந்து பணியின்போது, ஆட்டோவில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோழவரம் அருகே ஆத்தூர், எருமைவெட்டி பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சோழவரம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோவின் மீது ரோந்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த ஆட்டோவை மடக்கி, பிடித்து சோதனை செய்தனர்.
அதில், ஆட்டோவில் இருந்த 2 பேர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆட்டோ டிரைவர்களான ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன்(34), சரவணன்(31) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் மொத்தமாக கஞ்சா கடத்தி வந்து, சோழவரம் பகுதிகளில் சில்லறை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்திய முருகன், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 2 பேரையும் நேற்று பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.