*தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலை
திருப்பதி : சித்தூர் பைபாஸ் சாலையில் காரில் கடத்திய ₹50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பதி எஸ்பி சுப்பா ரெட்டி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று திருப்பதி எம்ஆர் பள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாயுடுபேட்டை சித்தூர் பைபாஸ் சாலையில் எம்ஆர் பள்ளி ஆய்வாளர் சாதிக் அலி தலைமையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவி எண் கொண்ட வாகனம் போலீசார் சோதனையை செய்வதை கண்டு சற்று தூரம் முன்னதாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்த 3 பேர் தப்பி ஓடினர். போலீசார் விரைந்து சென்று வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ₹50 லட்சம் மதிப்பிலான திரவ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகன சோதனையில் ₹50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். எங்கிருந்து கஞ்சா கடத்தப்பட்டது, கடத்தியவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.