பெரம்பூர்: பெரம்பூர் பகுதியில் வீட்டுக்குள் பதுக்கிய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர். சென்னை பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பி பிளாக்கில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெரம்பூர் ரமணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற ஞான ஸ்ரீதர் (30) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் உள்ளன.
பின்னர் தரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சரண் (46) என்ற நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரம்பூர் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தில் இருந்து வரும் நபர் குறிப்பிட்ட கஞ்சாவை தருவார், அதை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தரிடம் கூறியுள்ளார். அதன்பேரில் ஸ்ரீதர் வட மாநிலத்திலிருந்து வந்த நபரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தர் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சாவை வாங்கி வைக்கச் சொன்ன சரண் என்ற நபரையும், வட மாநிலத்தில் இருந்து வந்த நபரையும் தேடி வருகின்றனர்.