Saturday, February 24, 2024
Home » குண்டர் சட்ட வழக்குகளை விசாரிக்க மதுரையில் அறிவுரை கழகம் ஏற்படுத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

குண்டர் சட்ட வழக்குகளை விசாரிக்க மதுரையில் அறிவுரை கழகம் ஏற்படுத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

by Karthik Yash

மதுரை: குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதானவர்களின் வழக்குகளை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழகத்தை, மதுரை அல்லது வேறு நகரில் கூடுதலாக ஏற்படுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட இருவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதான வழக்கும், ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழகத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கணேஷ்குமார் மீதான குண்டர் சட்டம் நீடிக்கலாம் எனவும், மற்றொருவர் மீதான நடவடிக்கையை கைவிடவும் அறிவுரை கழகம் பரிந்துரைத்தது.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில், கணேஷ் குமார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறிவுரை கழகத்துக்கு அனுப்பப்படும் வழக்குகள் எப்படி அணுகப்படுகின்றன, என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை ஆய்வு செய்யும் வகையில், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் பி.குமார், சி.அருள் வடிவேல், வழக்கறிஞர் கே.பிரபாகர் ஆகியோரை நீதிபதிகள் நியமித்தனர்.

நீண்ட விசாரணைக்கு பின், இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார். கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: அறிவுரை கழகம் பின்பற்ற வேண்டிய நடைமுறையை வகுக்க, அரசியலமைப்பு சட்டம் வகை செய்துள்ளது. ஆனால், இதுவரை, இதற்கான நடைமுறை சட்டம் வகுக்கப்படவில்லை. இதனால், ஆட்கொணர்வு வழக்குகள், ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது, கைது செய்யப்படுபவர்கள் தரப்பில் புகார்களும் எழுப்பப்படுகின்றன. இத்தகைய புகார்களை சரிபார்க்க எந்த வழிமுறையும் இல்லை. ஏனென்றால், அரசுக்கு அறிவுரை கழகம் அனுப்பும் அறிக்கை மற்றும் பரிந்துரை ரகசியமாக வைக்கப்படுகிறது. ஆவணங்களை நீதிமன்றம் கேட்கும்போது, அறிவுரை கழகம் பதிவு செய்யும் இரண்டு வரி கருத்து மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறது.

அறிவுரை கழகத்தின் ஆலோசனையை ஏற்பதும், ஏற்காததும் அரசின் தனிப்பட்ட உரிமை என்றாலும், ஒன்றிரண்டு வழக்குகளை தவிர்த்து, பெரும்பாலும் அறிவுரை கழகத்தின் ஆலோசனையை அரசு ஏற்றுக் கொள்கிறது. இப்படி ஒரு நடைமுறையை அறிவுரை கழகம் பின்பற்றும்போது, அது உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள சட்ட அம்சங்களுக்கு உட்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி, அறிவுரை கழகம் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து, சட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுவரை தமிழக அரசு, அதற்கான சட்டத்தை இயற்றவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதிகளிடம் அறிவுரை கழகத்தின் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அறிவுரை கழக உறுப்பினர்களின் பதவி காலம் நிர்ணயிக்கப்படவில்லை. 3 ஆண்டுகள் நிர்ணயிக்கலாம். தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்காக, மதுரை அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில், கூடுதலாக ஒரு அறிவுரை கழகத்தை அமைக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். சென்னையில் உள்ள அறிவுரை கழகத்திடம் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வழக்குகளை ஒப்படைக்க வேண்டும். அறிவுரை கழகம் பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை, அரசு கீழ்க்கண்ட உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்.

அதாவது, அறிவுரை கழகத்தின் நடவடிக்கை, அறிக்கை, கருத்து, நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது. அறிவுரை கழகம் பொறுப்பேற்ற பின், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களின் வழக்குகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிவெடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கையும் விசாரணைக்கு எடுக்கும் முன், சம்பந்தப்பட்டவர்களுக்கு, 10 நாட்கள் அவகாசம் வழங்கி, முறையான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விசாரணை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன், அனைத்து ஆவணங்களும் அறிவுரை கழக உறுப்பினர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விசாரணை தேதி அன்று 2 மணி நேரத்துக்கு முன், கைதியை ஆஜர்படுத்த வேண்டியது, சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளின் பொறுப்பு. கைதிக்கு உரிய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். உறவினர், நண்பரை விசாரிக்க வேண்டும் என்று கைதி கூறினால், அதற்கும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அறிக்கை, கருத்தை, அரசுக்கு அறிவுரை கழகம் அனுப்ப வேண்டும். இதனைப் பெற்ற பின், இறுதி உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். அதை கைதிக்கு, அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அறிவுரை கழகத்திடம் இருந்து பெறும் அறிக்கை, கருத்தை அரசு ரகசியமாக வைக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi