* போலி அதிகாரிகள் மூலம் வசூல் வேட்டை
சேலம்: ரிசர்வ் வங்கி பெயரையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ள நிலையில், சேலம் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களை பயன்படுத்தியும் போலியான ஆவணங்களை தயார் செய்தும் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்தும் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்வதாக சிபிசிஐடி போலீசாருக்கு வந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி மூலமாக ஒன்றிய அரசிடம் இருந்து இரிடியம் மற்றும் காப்பர் விற்பனைக்காக பெறப்பட்டு பல்லாயிரம் கோடிக்கணக்கான பணத்தை விடுவிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இதற்காக ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு கமிஷன் செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தும் போது கூடுதலான வட்டியுடன் கோடிக்கணக்கில் முதலீடு தொகை கிடைக்கும் எனவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்து சிலர் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புகார் கொடுத்தார். அதன்மூலம் இந்த மோசடி வெளியே வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் கென்னடி கொடுத்த புகாரின்பேரில் இந்த வழக்கு சேலம் மாநகர குற்றப்பிரிவு குற்ற புலனாய்வு துறை ஒருங்கிணைந்த குற்றங்கள் பிரிவுக்கு கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டது. டிஎஸ்பி வினோத், இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் இங்கு வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.இதுதொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், சந்திரா ஆகியோர் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். அதேபோல் தர்மபுரியை சேர்ந்த அன்புமணி, சேலத்தை சேர்ந்த முத்துசாமி, கேசவன், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த காடிசார்லா கிஷோர்குமார் ஆகியோர் கடந்த 30ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து தங்க நிற உலோகம், போலி ஆவணங்கள், மோசடி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா முழுவதும் ஏராளமானோரை ஏமாற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் ரூ.4.5 கோடி வரை ஏமாற்றியுள்ளனர். குறிப்பாக இந்த இரிடியம் வர்த்தகம் ஒன்றிய அரசால் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதில் முதலீடு செய்வதாகவும் கூறி பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். பணம் செலுத்தியவர்கள் திருப்பி கேட்க ஆரம்பிக்கும் போது, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்வர்.
பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரி என போலியான அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்து அவர்களிடம் பேச வைப்பதும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிடம் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடி கும்பலிடம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களும் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் கொடுக்குமாறு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.