*2 பெண்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது
சேலம் : சேலத்தில் லாரியில் ₹27 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பிடிப்பட்ட வழக்கில், ஆந்திராவில் இருந்து நாகை வழியே இலங்கைக்கு கடத்த முயன்ற கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து சேலம் வழியே நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரிக்கு லாரிகளில் ரகசியமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் டிஎஸ்பி லட்சுமணன், இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், தர்மபுரி மாவட்டம் அரூர்-சேலம் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதில் நேற்று முன்தினம், ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அந்த லாரியில் வெல்டிங் வைக்க பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அடியில் அட்டை பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. உடனே லாரி டிரைவரான ஆந்திரா மாநிலம் அனக்காபள்ளி பகுதியை சேர்ந்த சேசுகும்மாலா (34) என்பவரை மடக்கி பிடித்தனர்.
பின்னர், லாரிக்குள் இருந்து ₹27 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். டிரைவர் சேசுகும்மாலாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இக்கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆந்திராவில் இருந்து நாகைக்கு கஞ்சாவை கடத்திச் சென்று, பிறகு கடல் வழியே இலங்கைக்கு கஞ்சா பார்சல்களை கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது. தெரியவந்தது. இதில், ஆந்திரா, புதுச்சேரி, நாகை பகுதியை 10க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
அக்கும்பலை கூண்டோடு கைது செய்ய, இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படை போலீசார், நாகைக்கு சென்று ₹27 லட்சம் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய மேலும் 3 பேரை நேற்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டணம் அருகேயுள்ள ரோலுகுண்டா வட்டிப்பா பகுதியை சேர்ந்த ராஜபாபு மனைவி அப்பலாநர்சா (62), ரோலுகுண்டா சென்னபூபாலபட்டிணத்தை சேர்ந்த ராஜபாபு மனைவி பார்வதி (66), சேலம் மாவட்டம் கருமந்துறை கீரைக்காடு மலைக்கிராமத்தை சேர்ந்த சடையன் (52) எனத்தெரியவந்தது.
இந்த 3 பேரும், ஆந்திராவில் 270 கிலோ கஞ்சாவை வாங்கி, லாரியில் ஏற்றி சேசுகும்மாலா மூலம் நாகைக்கு அனுப்பி வைத்துள்ளனர். லோடு புறப்படவும், விசாகப்பட்டணத்தில் இருந்து ரயிலில் திருச்சிக்கு வந்து நாகைக்கு பஸ்சில் சென்றுள்ளனர். கஞ்சா லாரி, நாகைக்கு வந்ததும் அதில் இருந்து 270 கிலோ கஞ்சாவையும் இறக்கி இலங்கைக்கு கடத்திச் செல்லும் நபர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் வழியில், சேலத்தில் 270 கஞ்சாவுடன் லாரி போலீஸ் பிடியில் சிக்கியதும், 3 பேரும் சிக்கிக்கொண்டனர். அப்பலாநர்சா, பார்வதி ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும், ஆந்திராவில் காட்டிற்குள் கஞ்சா விளைவிக்கும் நபர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதனால், ஆந்திரா, நாகை, இலங்கையை சேர்ந்த கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைதான அப்பலாநர்சாவின் தகாத உறவு காதலன் தான் சடையன். இவர், ஆந்திராவிற்கு கஞ்சா வாங்க சென்ற இடத்தில் அவருடன் பழகியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து கைதான லாரி டிரைவர் சேசுகும்மாலா, அப்பலாநர்சா, பார்வதி, சடையன் ஆகிய 4 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய மற்றும் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.