டேராடூன்: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு கடந்த 13ம் தேதி பேருந்து சென்றது. அந்த பேருந்து அதிகாலை 2 மணியளவில் டேராடூன் பஸ் நிலையம் சென்றடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் கீழே இறங்கிய நிலையில், பஞ்சாபை சேர்ந்த 20 வயது இளம்பெண் மட்டும் உள்ளே இருந்தார். அப்போது 5 பேர் கும்பல் பேருந்துக்குள் நுழைந்து, அந்தப் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், குற்றவாளிகள்இளம்பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். பேருந்து நிலையில் தனித்துவிடப்பட்ட அந்தப் பெண் குறித்து, அங்கிருந்த சிலர் உதவி உள்ளனர். தகவலறிந்த குழந்தைகள் நலக் குழுவின் ஹெல்ப்லைன் குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்து மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து எஸ்எஸ்பி அஜய் சிங் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் டிரைவர், கண்டக்டர்கள் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. விசாரணைக்காக அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்’ என்றார்.