ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான பட்டதாரி பெண் சென்னையில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் வந்திருந்த இவர், கடந்த 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட பாப்பாநாடு அடுத்த தெற்கு கோட்டையை சேர்ந்த பாஜ பிரமுகர் கவிதாசன் (25), இவரது கூட்டாளிகள் பிரவீன்(20), திவாகர்(27), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்து, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகே உள்ள கீற்று கொட்டகைக்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரசு மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்த சட்டங்களில் ஒன்றான பிஎன்எஸ்(பாரதிய நியாய சன்ஹிதா) சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பாஜ பிரமுகர் கவிதாசன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் கைதான 4 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது வழியில் ஈச்சங்கோட்டை பாலம் அருகே பாஜ பிரமுகர் கவிதாசன் தப்பிக்க போலீஸ் வாகனத்திலிருந்து குதித்துள்ளார். அப்போது அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து வந்த போலீசார், 4 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காயமடைந்த கவிதாசன் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட கவிதாசன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கல்யாண ஓடையை சேர்ந்த அதிமுக அமைப்பு செயலாளர் செந்தில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்துள்ளாராம்.
இந்த இரு கட்சிகளிலும் அவர் இணைந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் மீது கொலை வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.