சென்னை: விநாயகர் சதுர்த்தியின் போது இயற்கை நீர்நிலைகளை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த அரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கை நீர்நிலைகளை உருவாக்குவது, முன்கூட்டியே சிலை கரைக்கும் நீர்நிலையை அடையாளம் காண்பது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகளைக் கரைக்க கட்டணம் நிர்ணயிப்பது மற்றும் அபராதம் விதிப்பதை பொறுத்தவரை பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை மற்றும் அவர்களின் உணர்வு சார்ந்தது என்பதால் அதை செயல்படுத்த சட்டரீதியான செயல்முறை தேவைப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.