மதுரை: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 17 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இந்த பகுதியில் 7 சிலைகள் வைப்பதற்கு காவல்துறை உரிய வழிமுறைகளை வகுத்துள்ளது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும், சிலைகளை பாதுகாக்க இரவு பகலாக காவல்துறையினர் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது; இதெல்லாம் தேவையா என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர் சிலை வைக்க அனுமதி கோரி புதிய மனுவை மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் அளித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். மேலும், சிலை வைக்க காவல்துறையினர் விதிக்கக் கூடிய விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.