பஞ்ச ரத்ன கொழுக்கட்டை
தேவையானவை:
இட்லி அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா ½ கப்,
காய்ந்த மிளகாய் – 6,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,
கடுகு – ½ டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
அரிசி, பருப்புகளைச் சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள கலவையில் கொஞ்சம், கொஞ்சமாக உருட்டி எடுத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, வேகவைத்த உருண்டைகளைப் போட்டு கலக்கி இறக்கவும். பஞ்ச ரத்ன கொழுக்கட்டை ரெடி.
மின்ட் கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி மாவு – 1 கப்,
தேங்காய் துருவல்,
பொட்டுக்கடலை,
புதினா – தலா 1 கப்,
பச்சை மிளகாய் – 4,
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், புதினா, பச்சைமிளகாய் ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலக்கவும். பின் அரிசிமாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
மணி பேக் கொழுக்கட்டை (இனிப்பு)
தேவையானவை:
அரிசி மாவு – 1 கப்,
வேகவைத்து மசித்த பட்டாணி விழுது – ½ கப்,
தேங்காய் துருவல் – ¼ கப்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்,
வெல்லம் – 1 கப்,
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை:
கடாயில் 1½ கப் தண்ணீர் விட்டு, உப்பு, சிறிது எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். அதில் அரிசி மாவுத் தூவி கட்டி இல்லாமல் கெட்டியாக சிறு தீயில் கிளறி எடுக்கவும். வெல்லத்தை கரைத்து சூடாக்கி வடிகட்டி, அதில் பட்டாணி விழுது, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசிமாவு கலவையில் இருந்து சிறிது உருட்டி கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை கொஞ்சம் வைத்து பை போல் சுருக்கி ஒட்டி விடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுருக்குப்பை வடிவத்தில் பார்க்க அழகாக இருக்கும். இதன் சுவையிலும் சூப்பர்.
முத்துக் கொழுக்கட்டை
தேவையானவை:
ஜவ்வரிசி – 1 கப்,
மைதா – 2 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு,
மிளகாய் தூள் – ¼ டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுதண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் அழுத்திப் பிசையவும். அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி, பச்சைமிளகாய் விழுது சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, மிளகாய் தூள், தேங்காய் துருவல், எண்ணெய் விட்டுக் கலந்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக தயார் செய்து, ஆவியில் வேகவைத்து எடுத்தால் முத்துக் கொழுக்கட்டை தயார்.
ஹெர்பல் கொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி மாவு – 1 கப்,
கொத்தமல்லி – 1 கப்,
புதினா – ¼ கப்,
இஞ்சி – ஒரு சிறு துண்டு,
பச்சைமிளகாய் – 4,
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்,
தண்ணீர் – 1½ கப்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சைமிளகாய் இவற்றை சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு விட்டுக் கலக்கவும். வாணலியில் தண்ணீர், உப்பு, எண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை கட்டி இல்லாமல் கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ‘ஹெர்பல் கொழுக்கட்டை’ தயார்.
பீட்ரூட் இனிப்புக் கொழுக்கட்டை
தேவையானவை:
பீட்ரூட் துருவல்,
அரிசிமாவு – 1 கப்,
தேங்காய் துருவல் – ¼ கப்,
பொடித்த வெல்லம் – ¾ கப்,
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்,
நெய் – 4 டீஸ்பூன்,
முந்திரி – 10.
செய்முறை:
அரிசி மாவை வெறும் வாணலியில் வறுக்கவும். கடாயில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து சூடாக்கி வெல்லத்தை கரைய விட்டு வடிகட்டவும். அரிசி மாவு, பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், முந்திரி, நெய் விட்டு நன்றாக கலந்து வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டு கெட்டியாக பிசையவும். கலவையில் சிறிது, சிறிதாக எடுத்து உருட்டி லேசாக தட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சேமியா கொழுக்கட்டை
தேவையானவை:
சேமியா – 200 கிராம்,
தேங்காய் – 1 (துருவிக் கொள்ளவும்),
காய்ச்சிய பால் – 2 கப்,
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 1 கப்,
பச்சை மிளகாய் – 5(நறுக்கியது),
கடுகு, சீரகம்,
எள் – தலா ¼ டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சேமியாவை வறுத்து பாலில் 30 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து தீயை நிறுத்தி விட்டு கலக்கவும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகியவற்றையும் அதில் கலக்கவும். கையினால் நன்கு மசித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சேவரி கொழுக்கட்டை
தேவையானவை:
மிச்சமாகிப் போன சேவரி (ஓமப்பொடி,
தேன்குழல், காராசேவு, காரா பூந்தி போன்றவை) – 1 கப்,
அரிசி முாவு – 1 கப்,
மிளகு தூள் – 1 டீஸ்பூன்,
தண்ணீர் 1½ – கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மிச்சமாகிப் போன ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காரா பூந்தி எதுவாகிலும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் சொர சொரப்பாக தூள் செய்யவும். இதனுடன் மிளகுதூள் கலந்தால் பூரணம் தயார். கடாயில் உப்பு, எண்ணெய், தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசிமாவு தூவி கட்டியில்லாமல் கிளறி இறக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டிக் குழி செய்து, பூரணம் 1 ஸ்பூன் அளவு எடுத்து அரிசி மாவில் வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதை நினைத்த நேரத்தில் செய்து அசத்தலாம்.
இஞ்சி கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி மாவு – 1 கப்,
நறுக்கிய இஞ்சி,
பொடித்த வெல்லம் தலா – ½ கப்,
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்,
எண்ணெய், நெய் – தலா 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் தண்ணீர், உப்பு சிறிது, எண்ணெய் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும் போது அரிசி மாவு தூவி கெட்டியாகக் கிளறி எடுக்கவும். கடாயில் நீர் விட்டு சூடாக்கி வெல்லத்தை கரைய விட்டு, வடிகட்டி எடுக்கவும். இஞ்சி துண்டுகள், பொட்டுக்கடலையைச் சேர்த்து அரைத்து வெல்லக் கரைசலில் சேர்த்து, நெய் விட்டு பூரணமாக கிளறி இறக்கவும். அரிசி மாவுக் கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டிக் குழி செய்து சிறிது இஞ்சி பூரணம் வைத்து மூடி லேசாக அழுத்தி, அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
தினை மாவு பனை வெல்லம் கொழுக்கட்டை
தேவையானவை:
தினை மாவு (சூப்பர் மார்க்கெட் கடைகளில் கிடைக்கும்),
பனைவெல்லம் – தலா 1 கப்,
தேங்காய் துண்டுகள் – ½ கப்,
ஏலக்காய் தூள், சுக்குப் பொடி – தலா ½ டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தினை மாவை வெறும் கடாயில் வறுத்து, உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து கொதி நீர் தெளித்து பிசறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும். பனை வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டவும், இத்துடன் ஏலக்காய் தூள், சுக்குப் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்த்து சுடவைத்துக் கொதித்து வரும் போது பிசிறி வைத்துள்ள மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கி, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.