Thursday, April 25, 2024
Home » காந்திபுரம் to சோமனூர் பயணிகள் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா

காந்திபுரம் to சோமனூர் பயணிகள் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா

by Nithya

நன்றி குங்குமம் தோழி

“என்னையா ஓட்டச் சொன்னா உருட்டுற… டிராஃபிக்கில அப்படித்தான் தம்பி போகோனும்… டிராஃபிக்கா?! யோவ் கூட்டமே இல்ல… ரோடு அனாதையா கிடக்கு” என தன் அப்பா மகேஷுடன் மகள் ஷர்மிளா வேன் ஓட்டிக்கொண்டே சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ரீல்ஸ் மட்டுமல்ல, ஷர்மிளாவும் கடந்த வாரம் டாக் ஆஃப் த டாபிக்தான்.

உயரமான பேருந்தின் இருக்கையில் அமர்ந்தவாறே, இடது கால் கிளச்சை அழுத்தும் அதே நேரம், இடது கை கியரை முன்னோக்கி இழுக்க, வலது கை ஸ்டியரிங்கை லாவகமாக சுற்றிச் சுழற்றுகிறது. புன்னகையை இதழ்களில் தவழவிட்டவாறே கோவை ‘காந்திபுரம் to சோமனூர்’ வழித்தடத்தில் பேருந்தை இயக்குகிறார் ஷர்மிளா. அவர் ஓய்வாக இருக்கும் சில நிமிட இடைவெளியில் பெண்கள் பலரும் புகுந்து கை குலுக்கி அவரை வாழ்த்துகின்றனர். சில இளம் பெண்கள் பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஷர்மிளாவோடு நின்று செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். பயணிகள் பேருந்தில் ஓட்டுநராக இணைந்திருக்கும் ஷர்மிளாவை அவரின் ஓய்வு நேரத்தில் மடக்கினோம்.

‘‘சிலிண்டர் வண்டியில் தொடங்கிய கனவு என்னுது. எடுத்தவுடனே பெரிய விஷயத்தில் போய் உட்கார முடியாது இல்லையா… அதனால் அப்பாவின் வழிகாட்டுதலில் டூ வீலர், த்ரீ வீலர், போர் வீலர்னு சின்னச் சின்ன வண்டியில் தொடங்கி இன்று பயணிகள் பேருந்தில் வந்து நிற்கிறேன்…’’ மீண்டும் புன்னகைக்கிறார். “டயர் சைஸ்கூட இல்ல, நீயெல்லாம் பஸ் ஓட்டப் போறியான்னு” என்னை பலரும் கேலி பண்ணியிருக்காங்க. “கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி இருக்கு’’ன்னு சிலர் முகத்துக்கு நேரா கிண்டல் அடிச்சாங்க. அதையெல்லாம் நான் மைன்ட்ல ஏத்திக்கவேயில்ல… என்னோட கனவு பயணிகள் பேருந்தை இயக்குவதுதான்’’ என்கிற ஷர்மிளாவுக்கு ரோல்மாடல் அப்பா மகேஷ்தானாம்.

‘‘எங்களுக்கு சொந்தமாக ஆட்டோ இருந்ததால் பெரும்பாலும் எங்களின் பயணம் ஆட்டோவில்தான் இருக்கும். நிறைய பேர் அமர்ந்து செல்கிற உயரமான பயணிகள் பேருந்தை எங்கள் ஆட்டோவில் கடக்கும்போதெல்லாம், நாம எப்போப்பா இப்படி பஸ்ல போவோம் என ஏக்கத்தோடு அப்பாவிடம் கேட்டிருக்கேன். பேருந்தில் பயணம் செய்கிற வாய்ப்பே எனக்கு அமையாததால், பஸ்ஸின் மீது தீராத காதல் இருந்துகொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் அப்பாவின் டிரைவர் வேலையையும், அவரின் காக்கி உடையையும் நேசிக்க ஆரம்பித்தேன். ஏழாவது படிக்கும்போதே அப்பாவின் ஆட்டோவை எடுத்து மெல்ல மெல்ல ஓட்டிப் பார்க்க ஆரம்பித்து, பின்னர் கார் ஓட்ட கற்றுக்கொண்டேன். ஆம்னி வண்டி ஒன்றை வாங்கி பள்ளிக் குழந்தைகளை வைத்து ஸ்கூல் டிரிப் எல்லாம் அடிச்சிருக்கேன். அப்பாவோடு இணைந்து சிலிண்டர் வாகனத்தை ஓட்டி இருக்கேன்.

அப்போதுதான் எனக்கு பெரிய கனரக வாகனங்களையும் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை துளிர்விட ஆரம்பித்தது. படிச்சு முடிச்சு இந்த வேலைக்குதான் வருவேன்னு வீட்டில் உறுதியாகச் சொல்லிட்டேன். சின்ன வயதில் இருந்தே ஸ்டியரிங்கை பிடிக்க ஆரம்பித்ததால் எனக்கு இந்த வேலையை செய்வதில் பயமோ, பதட்டமோ துளியும் இருக்கவில்லை’’ என்றவர், பயணிகள் பேருந்தை இயக்க கற்றுக்கொள்வதற்கு முன்பே லாரியை ஓட்டிப் பழகியிருக்கிறார். அம்மாவும், அப்பாவும் முதலில் தயங்கினாலும் எனது தைரியம் மற்றும் விடாமுயற்சியை பார்த்து ஆதரவு தர
ஆரம்பிச்சாங்க என்கிற ஷர்மிளா மருந்தாளுனர் படிப்பில் (Dpharm) டிப்ளமோ முடித்திருக்கிறார்.

‘‘ஹெவி லைசென்ஸ் எடுக்கச் சென்றபோது அங்கிருந்த பலரும் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்’’ என்றவர், ‘‘கனரக வாகன உரிமம் பெறும் முயற்சியில் இரண்டு முறை ஃபெயிலாகி மூன்றாவது முயற்சியில்தான் உரிமம் கிடைத்தது’’ என்கிறார். ‘‘பலரும் பலவிதமாக என்னைப் பேசினாலும் இந்தக் காக்கிச் சட்டையை போட்ட பிறகே, நம்மால் முடியாததுன்னு எதுவுமே இல்லை என்கிற எண்ணம் எனக்கு வந்தது. என்னை ஏளனமாகப் பேசியவர்கள் எல்லாம், இன்று ஆச்சர்யம் கலந்த பார்வையோடு பார்க்கின்றனர். ஓட்டுநர்கள் அணியும் இந்த காக்கி உடையை எல்லோரும் மதிக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. அதை இன்று நான் சாதித்துக் காட்டியிருக்கிறேன்’’ என்றவர், தி.மு.க. எம்பி கனிமொழி கைபேசியில் தன்னை அழைத்து பாராட்டியதை மகிழ்ச்சியோடு நம்மிடம் பதிவு செய்தார்.

‘‘பேருந்தில் 10 மீட்டர், 11 மீட்டர், 12 மீட்டர் என இருக்கிறது. எனக்கு கிடைத்த பேருந்து 12 மீட்டர். பெரிய பேருந்து என்றவர், முதல்நாள் நான் பேருந்தில் ஏறி ஓட்ட ஆரம்பித்தபோது, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மிகவும் அமைதியாக நான் பேருந்து ஓட்டுவதையே கவனித்துக் கொண்டிருந்தனர்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘காலையில் 5.30 மணிக்கு பஸ்ஸில் ஏறி ஸ்டியரிங்கை பிடித்தால் இரவு 11.45 மணிக்குதான் பேருந்தைவிட்டு கீழே இறங்குவேன். பெண் என்ற காரணத்தைக் காட்டி, வேலையில் எந்தவிதத்திலும், என்னை நான் சமரசம் செய்து கொள்வதில்லை. நான் செய்யும் பணி பெண்களுக்கான அசாத்திய செயல் என்கிற எண்ணம் பலருக்கும் இருப்பதால், கோயம்புத்தூரே இப்போது எனக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறது’’ என்கிறார் புன்னகைத்து.

‘‘என்னுடைய பேருந்தைப் பார்த்து பயணிகள் பலரும் விரும்பி வந்து ஏறுகிறார்கள். எல்லோருமே என்னை மரியாதையோடும், அன்போடும் பார்க்கிறார்கள். மிகவும் அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்கள். என்னை கொண்டாடவும் செய்கிறார்கள். பெண் பயணிகள் தானாகவே முன்வந்து என்னை பாராட்டி செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் காட்டுகிறார்கள். முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் என்னை உற்சாகப்படுத்தி, கை குலுக்கி பாராட்டுவதுடன், அன்பின் மிகுதியால் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், பழங்கள் போன்றவற்றையும் வாங்கித் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்’’ என மீண்டும் புன்னகைத்தவர், என்னை நம்பி ஏறும் பயணிகளை பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற பொறுப்பு அதிகமாக இருப்பதால், பேருந்தை ஓட்டும்போது ரொம்பவே கூலாக, பொறுப்பை உணர்ந்து ஓட்டுவதாகவும் தெரிவிக்கிறார்.

பல மணி நேரம் தொடர்ந்து இஞ்சின் அருகே அமர்வதால் ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் உபாதைகள் குறித்து கேட்டபோது, ‘‘நான் என் வேலையை மிகவும் காதலித்து செய்வதால் எனக்கு எதுவுமே கஷ்டமாகத் தெரியவில்லை. என்னைப்போலவே பயணிக்கும் மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் அனைவருமே எனக்கு குடும்பமாக இருந்து ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள். அக்கறையுடன் தங்கள் வீட்டின் பெண் பிள்ளை போல என்னை கவனித்துக்கொள்கிறார்கள். பெண்களுக்கே உரிய கழிவறைப் பிரச்னைதான் எனக்கும் மிகப் பெரும் பிரச்னையாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் கழிவறைகள் சுத்தமாக இருப்பதில்லை. சுத்தமாக இருக்கும் இடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டிய நிலையும் இருக்கிறது. இது ஒன்றுதான் பணி நேரத்தில் நான் சந்திக்கும் மிகப்பெரிய சவால்’’ என்கிறார்.

‘‘என் அப்பாவை டிரைவர்தானே என மட்டமாக பிறர் பார்ப்பதை பல நேரங்களில் கவனித்திருக்கிறேன். ஓட்டுநர் உடைக்கு உள்ள தாழ்வான எண்ணத்தை மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். அதை சாதித்தும் காட்டிவிட்டேன். ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண் ஓட்டுநராகிய என்னை பாராட்டி வாழ்த்தி மரியாதை கொடுக்கும் இந்த சமூகம், ஆண் ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது மட்டும் ஏன் மதிப்பளிப்பதில்லை.

அவர்களை மட்டும் ஏன் ஏளனப் பார்வையில் பார்க்கிறீர்கள்’’ என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார். ‘‘ஆண்கள் செய்யும் ஓட்டுநர் பணியும் கடினம் நிறைந்ததுதான். கஷ்டங்களை வெளிகாட்டாமல், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அவர்கள்தானே பத்திரமாக கொண்டு சேர்க்கிறார்கள். அவர்களுக்கும் மதிப்பளித்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்கிற தனது நீண்டநாள் மனக்குறையை முன் வைக்கிறார் ஷர்மிளா.

‘‘இந்த வேலை ஒன்றும் எனக்கு சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. இந்த இடத்தை நான் அடைய பல்வேறு தடைகளையும், பல அவமானங்களையும் தாண்டியே வந்திருக்கிறேன்’’ என்றவர், ‘‘என்னை போன்ற பெண் ஓட்டுநர்களை அரசுப் பேருந்துகளில் பணி வாய்ப்பு கொடுத்து முன்னிறுத்தினால் மிகவும் சந்தோஷப்படுவேன். என்னைப் பார்த்து, இன்னும் பல பெண்கள் இந்தப் பணிக்கு தைரியமாக முன் வருவார்கள்’’ என்றவாறு கையசைத்து மீண்டும் ஸ்டியரிங்கில் கை வைத்தபடி நமக்கு விடைகொடுத்தார்.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

You may also like

Leave a Comment

10 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi