Monday, April 15, 2024
Home » காந்தி – கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; வேட்புமனுவை உடனடியாக திரும்ப பெறுங்கள்..! பாஜக வேட்பாளரான ஐகோர்ட் மாஜி நீதிபதிக்கு கண்டனம்

காந்தி – கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; வேட்புமனுவை உடனடியாக திரும்ப பெறுங்கள்..! பாஜக வேட்பாளரான ஐகோர்ட் மாஜி நீதிபதிக்கு கண்டனம்

by MuthuKumar

கொல்கத்தா: காந்தி – கோட்சே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதி, தனது வேட்புமனுவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வலியுறுத்தி உள்ளார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அபிஜித் கங்கோபாத்யாய் என்பவர், கடந்த 2018ல் கொல்கத்தா உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியானார். அதன்பின் 2020ல் உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் அவர் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா செய்தார். பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்துடன் அவர் போட்டியிடுகிறார்.

மகாத்மா காந்தி மற்றும் அவரை சுட்டுக் கொன்ற கோட்சே ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாத்மா காந்தியை அவமதிப்பதில், எந்தக் கல்லையும் விட்டுவைக்காத அபிஜித் கங்கோபாத்யாயின் வேட்புமனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பெங்காலி ஊடகம் ஒன்றுக்கு அபிஜித் கங்கோபாத்யாய் அளித்த பேட்டியில், ‘மகாத்மா காந்தி – கோட்சே ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதை என்னால் இப்போது கூற முடியாது. அதைப் பற்றி ஆராய வேண்டும்.

வக்கீல் தொழிலுடன் தொடர்புடைய நபராக நான் இருப்பதால், அந்த சம்பவத்தின் (காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது) மறுபக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அவரது (கோட்சே) எழுத்துக்களைப் படித்து பார்க்க வேண்டும். காந்தியைக் கொல்ல அவரைத் தூண்டியது எது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார். இவரது இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். காந்தியை கொன்ற கோட்சேவின் செயலை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், பாஜகவின் சித்தாந்தம் குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

nine + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi