கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
வட்டார அளவிலான குழு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிதல் மற்றும் அவர்களை பள்ளியில் சேர்த்தல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அடுத்த வகுப்பிற்கு சென்றிருப்பதை உறுதி செய்தல், எமிஸ்-ல் இணையதளத்தில் மாற்றுத்திறன் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
2022-23ம் ஆண்டில் பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட போக்குவரத்துபடி, மின்னணு புத்தகம், படிப்பு உதவித்தொகை, பிரெய்லி மூலம் பயனடைந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்தல், 2023-24ம் ஆண்டில் அறிவு சார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முதல் பருவ எண்ணும்-எழுத்தும் புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரத்தினை பதிவு செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளி உரிமைச் சட்டம் 2016ன்படி 21 வகையான குறைபாடுகள் மற்றும் அறிவு சார் குறைபாடு உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான எண்ணும் -எழுத்தும் பயிற்சி நூல் பற்றிய விபரங்களை வட்டார அளவிலான குழு உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும்.
ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிடுதல், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமும் ஈடுபாடும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறிய வேண்டும். அவர்களை ஊக்குவித்து அவர்களை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறச் செய்யவும், வழிகாட்டுதலும் பயிற்சியும் உடற்கல்வி ஆசிரியர் மூலம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஜூன் மாதம் உள்ளடங்கிய கல்வி சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்ட பொருள் சார்ந்து பள்ளி அளவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல், 2023-24ம் ஆண்டிற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு அடையாள அட்டை பெற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட வேண்டிய மாற்றுத்திறன் மாணவர்களின் பட்டியல் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல் போன்றவற்றை தயார்படுத்த வேண்டும்.
இந்த கூட்டப்பொருள் குறித்து குழு உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலி முத்து, ராஜேஸ்வரி இயன்முறை மருத்துவர் சரண்யா சிறப்பாசிரியர்கள் ரம்யா, ராணி, அறிவழகன் ,ராதா, பிரியா,லீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் நன்றி கூறினார்.