நன்றி குங்குமம் டாக்டர்
மனித உடலில் கல்லீரலுக்குக் கீழே ஒரு சிறிய பை உள்ளது, இது பித்தப்பை. இது செரிமான திரவமான பித்தநீரை சேமித்து வைத்திருக்கிறது. பித்தப்பையில் சேரும் திடப்படுத்தப்பட்ட கழிவுப் பொருட்களே பித்தப்பைக் கற்கள்.வழுவழுப்பான கொலஸ்ட்ரால் அல்லது பிலிரூபினால் ஆனவை பித்தப்பைக் கற்கள். இந்தக் கற்கள் சில நேரங்களில் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். அதே நேரம் அறிகுறியற்றதாகவும் இருக்கலாம்.
அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாதுபித்தப்பைக் கற்கள், அடிவயிற்று வலி அல்லது வயிற்று வலி போன்றவற்றின் போதும் இது பல மணிநேரம் நீடிக்கும். இது கடுமையானதாக இருக்கும். காய்ச்சல் ஏற்படும். பசியின்மை, வயிற்றுப்போக்கு அல்லது விரைவான இதயத் துடிப்பு ஆகியவையும் இதன் அறிகுறிதான்.
காரணம் என்ன?
பித்தப்பையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு, காலப்போக்கில் திடமாகத் தொடங்குகிறது, இது பித்தப்பைக் கற்களாக மாறுகிறது. மேலும் பிலிரூபின் (ஹீமோகுளோபின் முறிவினால் கல்லீரலில் உருவாகும் நிறமி) கூட பித்தத்தில் படிகமாகி, பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கிறது.
தடுப்பது எப்படி?
பித்தப்பைக் கற்கள் உருவாவதை முற்றிலும் தடுக்க எந்த வழியும் இல்லை. பித்தப்பை கற்கள் உருவாவதில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே, கேக், குக்கீ, சீஸ், கொழுப்பு நிறைந்த இறைச்சி, அதிகப்படியான கிரீம் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் பருமன், உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிக எண்ணெய் அல்லது சர்க்கரை கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சிகிச்சைகள்
பித்தப்பை கற்கள் கொண்ட நோயாளியின் உடல் நிலை, நோயின் தீவிரத்துக்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் மாறுபடும். வாய் வழி பித்த மாத்திரைகள் தருவது, பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சைகள், பெர்குடேனியஸ் கோலிசிஸ்டெக்டோமி போன்ற அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சை முறைகள் உள்ளன. பித்தப்பைக் கற்கள் அதிகமாக இருந்தாலோ தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருந்தாலோ மருத்துவர் அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
தொகுப்பு: இளங்கோ