புதுடெல்லி: ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியின் மெட்ரோ ரயில் நிலையங்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வரும் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை, பேருந்து வழித்தட மாற்றம், சில வழிகளில் பேருந்து தடை, விமான சேவைகள் ரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் சிவாஜி பார்க் முதல் பஞ்சாபி பார்க் வரையுள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘டெல்லி காலிஸ்தானாக மாறும்.. காலிஸ்தான் வாழ்க..’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.