டெல்லி : உலக பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்க, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து ஜி20 அமைப்பை உருவாக்கின. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.இதன் 18வது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் பகுதிகள் புதுப்பொலிவாக்கப்பட்டுள்ளன. ஜி20 மாநாட்டிற்காக புதிதாக சீரமைக்கப்பட்ட டெல்லி பிரகதி மைதானத்தில் பல நவீன வசதிகளுடன் பாரத மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தான் உச்சி மாநாட்டின் 2 நாள் கூட்டங்கள் நடக்க உள்ளன. பிரகதி மைதானத்தில் உள்ள கட்டிடங்கள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிளிர்கிறது.
சர்வதேச தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் 20 நட்சத்திர விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தாஜ் விடுதி உள்ளிட்ட விடுதிகள் அனைத்தும் மூவர்ண ஒளி வெள்ளத்தில் மிளிர்கிறது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஜமா மசூதியை சுற்றியுள்ள பகுதி வண்ண விளக்குகள், அலங்கார குடைகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாணக்யபுரி பகுதியில் டெல்லி மாநகராட்சியால் கட்டப்பட்ட பூங்காவில் உறுப்பு நாடுகளின் தேசிய பறவைகள் மற்றும் விலங்குகளின் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ஜி20 மாநாட்டையொட்டி 500 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்பட உள்ளன.நாளை தொடங்கும் ஜி20 மாநாட்டிற்கான 500 வகையான உணவுகளை தாஜ் ஓட்டல் நிர்வாகம் தயாரிக்கிறது.அசைவ உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகள், தினை உணவுகள் உலக தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.தென் இந்திய மசால் தோசை, பெங்காலி ரசகுல்லா, சிறப்பு தினை தாலி உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கப்பட உள்ளன.இந்திய பாரம்பரிய இனிப்பு வகைகள், பானிபூரி, பேல்பூரி சமோசா, வடபாவ் உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.