Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ இசைப்பேரரசி எஸ்.ஜானகி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: மைசூரில் நடந்தது

சென்னை: ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் இசைப்பேரரசி என்றும் வர்ணிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88), உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக, நேற்றிரவு 7.30 மணியளவில் மைசூரில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை மைசூரில் கர்நாடக அரசு மரியாதையுடன் நடந்தது.

கடந்த 1938ல் ஆந்திராவிலுள்ள குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா என்ற ஊரில், தெலுங்கு பிராமண குடும்பத்தை சேர்ந்த ராமமூர்த்தி, சத்தியவதி தம்பதியின் மகளாக பிறந்த எஸ்.ஜானகி, சிறுவயதிலேயே பாட தொடங்கிவிட்டார். 3 வயது முதல் 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது அவருக்கு வயது 9. நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். வி.சந்திரசேகர் நடத்திய மேடை நாடக இடைவேளைகளில் எஸ்.ஜானகி முதல்முறையாக பாடினார். 1956ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டு போட்டியில் பங்கேற்று 2வது பரிசு பெற்ற அவர், பிறகு சென்னைக்கு வந்தார். ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமிக்கப்பட்டார். 1957ல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில், ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான எஸ்.ஜானகி, இப்பாடல் வெளியான மறுநாளே தெலுங்கில் ‘எம்.எல்.ஏ’ என்ற படத்தில் ‘நீயாசா அடியார்’ என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார். இதையடுத்து அவருக்கு நிறைய படங்களில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது.

முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களை பாடி முடித்த எஸ்.ஜானகி, கடந்த 1957ல் இருந்து தமிழ் மொழியில் பாட தொடங்கினார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜப்பான், ஜெர்மன், படுகா, பஞ்சாபி உள்பட இன்னும் சில மொழிகளிலும் அவர் பாடியிருக்கிறார். 17 மொழிகளுக்கும் மேல் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்ற அவர், இது ஒரு பெரிய சாதனை இல்லை என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார். கடந்த 1992ல் இலங்கையில் நடந்த ஒரு விழாவில் அவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பக்தி பாடல்களை தானே எழுதி இசை அமைத்து பாடியிருக்கிறார். ‘மௌன போராட்டம்’ என்ற தெலுங்கு படத்துக்கு முதன்முதலில் அவர் இசை அமைத்தார். பல்வேறு மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் எஸ்.ஜானகி, நிறைய பாடல்களை தானே எழுதி இசை அமைத்து பாடியுள்ளார். மேலும், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை 4 முறை பெற்றுள்ளார்.

கடந்த 2014ல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில், நடிகர் தனுஷுடன் இணைந்து, ‘அம்மா அம்மா’ ௭ன்ற பாடலை பாடிய எஸ்.ஜானகி, தொடர்ந்து ‘பேபி’ என்ற படத்தில் பாடினார். ‘திருநாள்’ என்ற படத்தில், காந்த் தேவா இசையில் ‘தந்தையும் யாரோ... தாயாரும் யாரோ’ என்ற பாடலை பாடினார். கடந்த 1986ல் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது, கடந்த 2002ல் கேரள அரசு வழங்கிய சிறப்பு விருது மற்றும் 4 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ள எஸ்.ஜானகி, பத்மபூஷண் விருது வாங்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடந்த 2013ல் தனக்கு கொடுப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்த பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்த அவர், இந்த விருது தனது 55 ஆண்டு கால அனுபவத்துக்கு மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது ௭ன்று சொன்னார்! அவரது கருத்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த 1980ல் மலையாள படத்துக்கும், கடந்த 1984ல் தெலுங்கு படத்துக்கும் தேசிய விருது பெற்றுள்ள எஸ்.ஜானகி, 14 முறை கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும், 7 முறை தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும், 10 முறை ஆந்திர அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் பெற்றுள்ளார். கடந்த 1976ல் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த ‘16 வயதினிலே’ என்ற படத்தில் பாடியிருந்த ‘செந்தூரப் பூவே செந்தூரப் பூவே’, கடந்த 1980ல் ‘ஒப்போல்’ என்ற படத்தில் பாடியிருந்த ‘௭ட்டுமனூரம்பழத்தி’, கடந்த 1984ல் ‘சித்தாரா’ என்ற படத்தில் பாடியிருந்த ‘வென்னெல்லோ கோடாரி அந்தம்’, கடந்த 1992ல் ‘தேவர் மகன்’ என்ற படத்தில் பாடியிருந்த ‘இஞ்சி இடுப்பழகா’ ஆகிய பாடல்களுக்காக எஸ்.ஜானகி தேசிய விருது பெற்றார்.

தவிர, 1962ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் வெளியான ‘கொஞ்சும் சலங்கை’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல், தமிழ் படவுலகில் எஸ்.ஜானகியின் முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் வளராத அக்காலத்தில், இப்பாடல் 2 இடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மும்பையில் இருந்த தயாரிப்பாளர் ராமன் ஸ்டுடியோவில் எஸ்.ஜானகி பாட, இப்பாடலுடன் இணைந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசையை, நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னையிலுள்ள ஸ்டுடியோவில் வாசித்து, அது 2 டிராக்கில் பதிவு செய்து, பிறகு ஒலிக்கலவை என்கிற மிக்ஸிங் முறை மேற்கொள்ளப்பட்டது. இப்பாடல் எஸ்.ஜானகியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் மாபெரும் சாதனை படைத்தது. அனைத்து இசை அமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து முன்னணி பின்னணி பாடகர்களுடனும் இணைந்து அவர் பாடினார். இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி என்ற கூட்டணி, தென்னிந்திய படவுலகம் மற்றும் இசைத்துறையில் தனி முத்திரையை பதித்தது.

எஸ்.ஜானகியின் கணவர் ராம் பிரசாத் காலமாகிவிட்டார். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வசித்து வந்த எஸ்.ஜானகி, ‘இனிமேல் சினிமாவில் பாட மாட்டேன்’ என்று ஒரு இசை நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டு, ஐதராபாத்துக்கு சென்று ஓய்வெடுத்தார். அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா திரைப்படங்களில் பாடவில்லை என்றாலும், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். அவரும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 22ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் எஸ்.ஜானகி மிகவும் கவலையுடன் காணப்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக, நேற்றிரவு 7.30 மணியளவில் மைசூரில் காலமானார்.

கர்நாடக அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மைசூரில் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மெல்லிசை ராணி எஸ்.ஜானகியின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும். கர்நாடக அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்க அமைச்சர் டாக்டர் யதீந்திர சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். தனது அற்புதமான குரலால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற அந்த மாபெரும் பாடகிக்கு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. மைசூரிலுள்ள எச்.டி.கோட்டை சாலையில் அமைந்துள்ள கனியனஹுண்டியில் இருக்கும் நவீன் பண்ணை இல்லத்தில், எஸ்.ஜானகியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடந்தது. முன்னதாக, அவரது உடல் காலை 8 மணி முதல் மைசூர் மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவற்காக வைக்கப்பட்டு இருந்தது.

எஸ்.ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் விஜய், ‘இந்திய திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால், பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக்கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், தலைமுறைகளை கடந்து மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவை. இணையற்ற நளினத்துடனும், பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வுக்கும் அவை குரல் கொடுத்தன. அவரது இனிமையான பாடல்கள் வரவிருக்கும் ஆண்டுகளிலும் கேட்போரை தொடர்ந்து வசீகரிக்கும். இந்த துயரமான வேளையில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசையுலகினருக்கும் எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவால், இந்தியா ஒரு இசை சின்னத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல் வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப்பயணத்தில் இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய கானகோகிலம் ஜானகி இசைப்பயணம் மிகவும் நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிபை வரையில் அவரது அமுதகானங்களை தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு ரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பாகும். இனிமையும், இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களை பாடிய அவர், என்றும் நமது இல்லங்களிலும், நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள், ரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், நடிகைகள் குஷ்பு, சிம்ரன், திரிஷா, கவிஞர் வைரமுத்து உள்பட பலர், தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளனர்.

நான்கு தலைமுறையினருடன் பயணம்

திரையுலகில் 4 தலைமுறை பின்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார், எஸ்.ஜானகி. கண்டசாலா, டி.எம்.சவுந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா, மனோ, உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன், சங்கர் மகாதேவன், ஹரிஹரன் உள்பட பலருடன் இணைந்து பாடிய அவர், ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில் தனுஷூடன் இணைந்து ‘அம்மா அம்மா’ என்ற பாடலை பாடினார்.

எஸ்.ஜானகியின் கடைசி பாடல்

ஓடிக்கொண்டே இருக்க விரும்பாமல், சொந்த வாழ்க்கையில் ஓய்வெடுக்க விரும்பிய எஸ்.ஜானகி, ‘10 கல்பனகள்’ என்ற மலையாள படத்துக்காக பாடிய ‘அம்மபூவினு’ என்ற பாடல்தான் கடைசி பாடலாகும். ஓய்வெடுக்கும் தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், ‘எனது கடைசி பாடல் மலையாள மொழியில்தான் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் திட்டமிடவில்லை. நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில், அந்த சந்தர்ப்பம் தானாக வந்து அமைந்தது’ என்றார்.