தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை மேம்படுத்த முதல் தவணையாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, முரசொலி எம்.பி., தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவையை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் முரசொலி எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வெளியிலிருந்து உள்ளே செல்வதற்கு வசதியாக முதல் கட்டமாக ஒரு பேட்டரி காரை சுற்றுலா துறையினரிடமும், இந்திய தொல்லியல் துறையினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் மற்ற இரு பேட்டரி கார்கள் வர உள்ளது. வாகனத்தில் செல்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மக்களவையில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தஞ்சாவூர் பெரியகோயிலை மேம்படுத்துவதற்கு முதல் தவணையாக ரூ.25 கோடியை மத்திய சுற்றுலா துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது. இதன் பின்னர், பணிகள் நடைபெறும். இதேபோல, வெளியிலுள்ள அகழியை மேம்படுத்துவதற்காக இரண்டாவது தவணையை ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.