இந்தியாவில் சொந்த வீடு என்பது பலருக்கு பெரும் கனவாக இருந்து வருகிறது. பலர் வாடகை சுமையை தாங்க முடியாமல் திணறி வருகின்றனர். அவர்களுக்கு வீடு கட்ட அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அனைவருக்கும் சொந்த வீடு கட்ட உதவும் வகையில் 2015ம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன். இத்திட்டம் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கானது. நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள், நகர்ப்புறங்களில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டம் மற்றொன்று. நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் வீடுகளை வழங்குவதே நோக்கமாகும். இத்திட்டம் செலவு-பகிர்வு மாதிரியை அடிப்படையாக கொண்டது. அதாவது பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான செலவை ஒன்றிய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் கூட்டாக ஏற்கின்றன. செலவு பகிர்வு விகிதத்தை பார்த்தால், சமவெளி பகுதிகளில் ஒன்றிய அரசு 60% செலவையும், மாநில அரசு 40% செலவையும் ஏற்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீட்டுக் கடனில் சலுகைகளை பெறலாம். இந்த உதவி ‘கிரெடிட் லிங்க்டு மானியத் திட்டம் (சிஎல்எஸ்எஸ்)’ மூலம் வழங்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பட்ஜெட்டில் ஒன்றிய அரசு நிதி, குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஒன்றிய அரசின் இலக்கை எட்ட முடியவில்லை. நகராட்சி, பேரூராட்சியில் வசிப்பவர்கள் வீடு வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு காத்து கொண்டு இருக்கிறார்கள். பேரூராட்சியில் (மக்கள் தொகைக்கு ஏற்ப) ஆண்டுக்கு 20 வீடுகள் ஒதுக்கப்படுகிறது. இது மிக மிக குறைவாகும். மேலும் 2015ம் ஆண்டில் கணக்கின்படி 350 சதுரஅடியில் வீடு கட்ட ஒன்றிய அரசு ₹2.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. 9 ஆண்டுகளுக்கு பிறகும் விலைவாசி உயர்வில் அதே நிதியில் 350 சதுரஅடியில் வீடு கட்டுவது எப்படி சாத்தியம் ஆகும். இதனால் ஏழை மக்கள், இந்த திட்டத்தால் பயனடைய முன்வரவில்லை. நடுத்தர மக்கள் தான், தங்களது சொந்த நிதியை பயன்படுத்தி இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள். குடிசை வீடு இல்லாத நிலையை அடைய வேண்டும் என்றால் நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். இதனால் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி 2016 முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வீடு கட்டியது போன்று கணக்கு காட்டிவிட்டு அவர்களுக்கு சிறு தொகையை வழங்கிவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2024 ஒன்றிய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PMAY திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 66% அதிகரித்து ₹79,000 கோடியாக அறிவித்தார். பிரதமர் ஆவாஸ் யோஜனா தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் கூறியுள்ளார். ‘மூன்று கோடி வீடுகள்’ என்ற இலக்கை எட்டியுள்ளோம். குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகளை கட்ட முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார். வீடுகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் நிதியை அதிகரித்தால் தான் உண்மையான ஏழை மக்கள் பயனடைவார்கள். விலைவாசி உயர்வால் 350 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு குறைந்தபட்சம் ₹3.5 லட்சமாவது நிதியை ஒன்றிய அரசு உயர்த்தி தர வேண்டும் என்பது தான் ஏழை மக்களின் வேண்டுகோளாக உள்ளது.