சென்னை: தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் கல்வி நிதி ரூ.2152 கோடி நிதியை தர மறுப்பதோடு, ஒன்றிய அரசு கொண்டு வரும் புதியக் கல்வி கொள்கையில் தமிழ்நாடு அரசு கையொப்பம் இட்டால்தான் அளிக்கப்படும் என்ற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு கடுமையான கட்டணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தின் முதல் முன்மொழிவு, மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்கின்ற பேச்சு வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கையில் 3,5,8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்வு நடத்தும் நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்குகிற நிலைதான் இந்த 3,5,8, வகுப்புக்கான தேர்வு முறை.
குறிப்பாக உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகிறார்கள். இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில். இந்த புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதிகரித்து குலக் கல்வியை மீண்டும் கொண்டுவரும் திட்டமாகும். பள்ளி கல்வி அமைச்சர் நேரில் சென்று டெல்லியில் பலமுறை முறையிட்டும் நிதி வழங்காமல் இருப்பது ஆசிரியர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி ஒத்திசைவு பட்டியலில்தான் உள்ளது. ஒத்திசைவு என்பது ஒருவழி பாதை அல்ல. இரு அரசுகளும் ஏற்றுக் கொண்டால் தான் புதிய நடைமுறையை செயல்படுத்த முடியும். அண்ணா காலத்தில் அறிவிக்கப்பட்ட இருமொழி கொள்கையே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே ஒன்றிய அரசு, உடனடியாக கல்விக்கு ஒதுக்கிய நிதி ரூ.2152 கோடியை தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்கள்-மாணவர்கள்-பெற்றோர்கள் ஒன்று திரண்டு போராட்ட இயக்கங்களை அறிவிப்போம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.