தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வதந்தி பரப்பி வருகின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், மிகவும் குறைவாக நடக்கும் மாநிலங்களில், தமிழகம் ஒன்றாக உள்ளது. போக்சோ குற்றங்கள் தொடர்பாக, எவ்வித அச்சமும் இல்லாமல், போலீஸ் நிலையத்தில், நம்பிக்கையோடு புகார் அளிக்கும் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘‘தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகி விட்டதாக பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டிஜிபியின் நேர்காணலை பகிர்கிறேன். என்சிஆர்பி தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.
அதே நேரம், போக்சோ குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகார் அளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது,’’ என்று ெதரிவித்துள்ளார். அதோடு ஏற்கனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் கொள்கை,’’ என்றும் தனது சமூக வலைதளத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.
தமிழ்நிலத்தில் சமூகநீதி சார்ந்த திட்டங்களை மைய சக்கரமாக கொண்டு சுழல்கிறது முதல்வர் தலைமையிலான ஆட்சி. இங்கே சமத்துவம் என்பது அனைத்து நிலைகளிலும் பின்பற்றப்படுகிறது. நடப்பாண்டில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார் முதல்வர். இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்த முதல்வர், அவையில் பேசுகையில், ‘‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்திய அளவில் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் அதிக பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு இந்த திராவிட மாடல் அரசு அடக்குகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, கடுமையானதாக மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் தான், பிஎன்எஸ் சட்டத்தின் கீழும், நம் மாநில அரசின் சட்டத்தின் கீழும், ஏற்கனவே இருக்கும் தண்டனைகளை மேலும் கடுமையாக்கும் நோக்கில், இந்த மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது,’’ என்று உறுதி அளித்ததையும் மக்கள் மறந்து விடவில்லை.
அந்த உறுதிக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது, தற்போதைய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது முதல்வர் தலைமையிலான காவல்துறையின் தனித்துவ செயல்பாட்டிற்கு மகுடம் சூட்டியுள்ளது. இது ஒரு புறமிருக்க, இந்திய நீதி அறிக்கை 2025ன்படி காவல், நீதிவழங்கல் மற்றும் சிறை மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற 5 தென் மாநிலங்களே முன்னணியில் உள்ளது என்பதும் இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.