இல்லை. அப்படியெல்லாம் எங்குமே சொல்லப்படவில்லை. வழக்கத்தில் இருந்த விஷயம் இப்போது சம்பிரதாயமாக மாறியிருக்கிறது. இது குறித்து கொஞ்சம் ஆழமாக போய் பார்க்க வேண்டும். இது குறித்து சிந்திக்கிற நேரம் இதுவேயாகும். ஏனெனில், இப்போதெல்லாம் ஒரு கோயிலில் எந்தவொரு விசேஷமானாலும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கூட்டம் கூடுகிறார்கள். ஏன் என்று பார்த்தால், இன்று தரிசனம் செய்தால் மட்டுமே நிறைய புண்ணியம் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதும் நம்பிக்கை கொள்வதும் அவரவர் பக்தியையும் மனப்பாங்கினையும் பொறுத்தது. ஆனால், அதையே அப்படியே மன இறுக்கமாக மாற்றிக் கொண்டு, கூட்ட நெரிசலில் கஷ்டப்பட்டு செல்கிறார்கள். இந்த அவஸ்தையானது பேருந்தை பிடிப்பதிலிருந்து தொடங்குகிறது. வயதானவர்கள் நிற்க முடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஐந்து முதல் எட்டு வயது வரை குழந்தைகள், அந்த கூட்ட நெரிசலில் பெற்றோரின் கைகளை பிடித்துக் கொண்டு, பயந்து கொண்டே நடக்கிறார்கள்.
இப்படித்தான் எல்லா ஊர் கோயிலிலும் சிறிய விழாக்கள் முதல் பெரிய விழாக்கள் வரை நடக்கின்றது. சரி இவையெல்லாம் காலம் காலமாக வருகின்றதே… ஏதோ ஒருநாள் தானே? கூட்டத்தோடு கூட்டமாக குழந்தைகள் கடைகளை வேடிக்கை பார்ப்பதும், ஏதொவொன்று வாங்கி மகிழ்ச்சியடைவதும் என்றுகூட விட்டுவிடலாம். ஆனால், பௌர்ணமி கிரிவலம் என்பது அப்படியல்ல? கிரிவலம் என்பது அருணாசல மலையை வலம் வருதலே ஆகும். அந்தக் காலத்தில் மின் விளக்குகள் இல்லாத நாட்களில் பௌர்ணமியன்று இரவு அமைதியாக கிரிவலம் வந்து கொண்டிருந்தார்கள். பகலிலும் வந்தபடி இருந்தார்கள். இப்போது ஒரு நல்ல நம்பிக்கையை மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அதாவது, பௌர்ணமி அன்று மட்டும் கிரிவலம் வந்தால் விசேஷம் என்கிறார்கள். அப்படியானால், ஏதோ ஒரு பௌர்ணமி என்கிற திதியன்றுதான் அருணாசலம் என்கிற மகத்தான சக்தி வேலை செய்கின்றது என்று பொருள் வந்துவிடும். அபாயம் இருக்கின்றது.
மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இன்னும் கேட்டால், இறை சிந்தனையை திடப்படுத்தி அவர்களை தீவிரமான ஆன்மிகத்தில் புகுத்தவே வைத்திருக்கிறார்கள். அதேபோன்றுதான், கிரிவலம் என்பது தவத்திற்கு இணையானது. அருணாசல மகாத்மியத்தில், ஒரு ஆன்மிக சாதகன், கர்ப்பிணி எப்படி நடப்பாளோ அப்படித்தான் கிரிவலம் வரவேண்டும் என்று இருக்கிறது. அவசர அவசரமாக நடந்து முடித்து, சீக்கிரமாக பேருந்தை பிடித்துவிட வேண்டுமென்று நினைப்பது வீணானது. எனவே, எல்லா சடங்குகளைப் போல, கிரிவலத்தையும் சடங்காகவோ… நான் வேண்டிகிட்டேன் நிறைவேத்திட்டேன் என்பதுபோன்று செய்யக் கூடாது. நான் ஒரு சாதாரணமான மனிதனின் கண்ணோட்டத்தில்தான் கேட்கிறேன். அதனால், எல்லா நாட்களுமே கிரிவலத்திற்கு உகந்த நாட்கள்தான். இங்கு மலையே சிவமாக இருக்கிறது. அப்படி சிவமாக இருக்கின்றது என்பதை ஆதியில் கௌதம மகரிஷி, பார்வதிதேவி என்று தொடங்கி திருஞானசம்மந்தர், மாணிக்க வாசகர், அப்பர் சுவாமிகள் என்று தொடர்ந்து விருபாட்சி தேவர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகிராம்சுரத்குமார் வரை எண்ணற்ற ஞானிகள் நமக்குச் சொல்லியபடி இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் இந்த அருணாசல மலையை நிச்சயம் வலம் வாருங்கள் என்றே சொல்லியிருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட அத்தனை ஞானிகளும் ஒருசேர சொல்லியிருக்கிறார்கள், அதில் நமக்கு எள்ளளவும் ஐயம் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால், அது அருணாசலேஸ்வரரின் அருள் கட்டளையாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதை பௌர்ணமி அன்று மட்டும் வாருங்கள் என்று யாரும் ஆணையாக சொன்னதில்லை. இப்படித்தான் நீங்கள் பௌர்ணமி அன்று மட்டும் வாருங்கள் என்று நியமமே அளிக்கப்படவில்லை. இந்த திருவண்ணாமலை கிரிவலம் சம்மந்தமாக புராணத்தோடு கூடிய, ஆழமான, தத்துவார்த்தமான விஷயங்களை, நமது தினகரன் குழுமத்தில் இருந்து வெளியிடப்படும், சூரியன் பதிப்பகம் வாயிலாக “திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை’’ என்கிற புத்தகம் மூலமாக அடியேன் எழுதியிருக்கிறேன். இப்போது பௌர்ணமி அன்று மட்டும்தான் கிரிவலம் செல்வோம் என்பதாக பக்தர்கள் வலம் வருகிறார்கள்.
இது சரியா… தவறா… என்பதல்ல பிரச்னை. கிரிவலம் என்பது ஆத்மார்த்தமானது. ஆன்மிக மயமான வாழ்க்கையை இன்னும் தீவிரப்படுத்தும் தவச் செயலாகும். அதை இப்படி அவசர அவசரமாகச் செய்யலாமா? என்பதே கேள்வி. அப்போது எப்படித்தான் வரலாம்? கூட்டமில்லாத நாட்களில்கூட வரலாம். உங்களுக்கு இன்னும் நிறைவாக வரவேண்டுமெனில், உங்களுடைய பிறந்த நாள், உங்களின் குழந்தைகளின் பிறந்த நாள், திருமண நாள், போன்ற நாட்களில்கூட வரலாம். இன்னும் கேட்டால், மெதுவாக நடந்து நடந்து… ஆங்காங்கு மெல்ல கண்கள் மூடி ஐந்து நிமிடங்களோ அல்லது அரைமணி நேரமோ ஏதேனும் பதிகங்களை ஆழ்ந்து அனுபவித்துச் சொல்லியபடி நடக்கலாம்.
இதை ஆழ்ந்து அனுபவித்துச் செய்ய வேண்டும். உங்கள் மனம் ஒருமைப்பட்டு செய்ய வேண்டும். கிரிவலம் என்பதே, அந்த மகத்தான மலையின் சக்தியை உங்கள் மனம் உள்வாங்கும் அளவிற்கு, உங்கள் மனதை காலியாக வைத்திருக்க வேண்டும். அந்த மலையின் அண்மை உங்களை துளைத்துச் செல்ல நீங்கள் அனுமதிக்கச் செய்ய வேண்டும். மனம் லொடலொடவென்று ஏதேனும் அரற்றிக் கொண்டிருந்தால், எப்படி உங்களால் அந்த மலையின் தன்மையை உள்வாங்க முடியும். எனவேதான், மெதுவாக அல்லது சாதாரணமாக நடந்து கொண்டே மனதிற்குள் ஏதேனும் நாமத்தை
உச்சரித்தபடியே செல்லலாம்.
ஆனால், மக்கள் எப்படி செல்கிறார்கள் தெரியுமா? எல்லோரையும் அப்படி சொல்வதற்கு இல்லை. ஆனால், அதிவேக நடை, வியர்த்து விறுவிறுத்து அடுத்த அடிகூட எடுத்து வைக்க முடியாமல் கால் வலியோடு எப்போதடா இந்த கிரிவலத்தை முடிப்போம் என்று ஒவ்வொரு அடிக்கும் இன்னும் எத்தனை கிலோமீட்டர் உள்ளது என்று யோசித்துக் கொண்டே செல்வார்கள். நடைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கால் வலிக்கத்தான் செய்யும். அப்படிப்பட்டவர்கள் அங்கு செல்லும்போது, எட்டு மணி நேரமானாலும் பரவாயில்லை. ஆங்காங்கு மெதுவாக அமர்ந்து.. அமர்ந்து, லகுவான உணவை எடுத்துக் கொண்டுகூட கிரிவலம் செல்லலாம்.
கிரிவலம் என்பது, அமைதியாக வரவேண்டியதாகும்.
கிரிவலம் என்பது, ஆன்மிக யாத்திரையில் உங்களை உள்முகமாக மாற்றும் கிரியையாகும்.
கிரிவலம் என்பது, பக்தியோகத்தின் மையப்புள்ளியாகும்.
கிரிவலம் என்பது, ஞான யோகத்தின் ரகசியச் சாவியாகும்.
கிரிவலம் என்பது, சடங்கல்ல.
கிரிவலம் என்பது, ஆன்மிக சாதனை.
கிரிவலம் என்பது, அவசர அவசரமாக வரவேண்டியதல்ல.
கிரிவலம் என்பது, ஆனந்தமாக அதேசமயம் அவசரமில்லாமல் வர வேண்டியது.
கிரிவலம் என்பது, பௌர்ணமி அன்று மட்டும் வருவதற்கல்ல.
கிரிவலம் என்பது, பௌர்ணமி என்கிற ஒரு திதிக்குள் மட்டும் கட்டுப்பட்டதல்ல.
அப்படி எந்த நியதியையும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது எல்லா காலத்திலும் செய்ய வேண்டியது. எல்லா நாட்களும் கிரிவலம் வரத் தகுதியான நாட்களே. கிரிவலம் வாருங்கள், மலையின் தென்றல் காற்றும், அருணாசலேஸ்வரனின் அருட்காற்றும் எப்போதும் வீசியபடிதான் இருக்கிறது.