நன்றி குங்குமம் டாக்டர்
நாம் சிறு வயதிலிருந்தே கொழுப்பு உணவுகளை விரும்பி உண்பதால், முதுமையில் வரவேண்டிய இதயநோய், ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவை இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. அது மட்டுமின்றி உடலில் கொழுப்புகள் சேர்வதனால் ரத்தக்குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பு, இறப்புவரை கொண்டுவிட்டுவிடுகிறது.
ஒழுங்கற்ற லைஃப் ஸ்டைல், ஃபாஸ்ட் ஃபுட் நிறைய சாப்பிடுவது, இன்ஸ்டண்ட் உணவுகளை விரும்பி உண்பது, அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது,
உடற்பியிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் உடல் நலிவடைய காரணமாகின்றன. இவற்றையெல்லாம் குறைக்க, பழரசங்கள், பானங்கள் உதவுகின்றன. அந்த வகையில் சில பானங்களை பற்றி பார்ப்போம்.
*முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள டார்டாரிக் ஆசிட், உடலில் சேரும் சர்க்கரை கொழுப்புகக்ளாக மாறுவதை தடுக்கும். மேலும் முட்டைக்கோஸில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாக உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது.
*பார்ஸ்லி கீரை ஜூஸில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள், உடலின் நச்சுக்களை வெளியேற்றும். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகளவில் உள்ளது. இந்த ஜூஸைக் குடிப்பதால் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் கரைவதோடு, எடையையும் குறைக்க உதவுகிறது.
*வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைசாறும், தேனும் கலந்து அருந்த தொப்பை குறைந்து, தட்டையான வயிறு கிடைக்கும்.
*இலந்தைப்பழ இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் பி2 போன்றவை நிறைய உள்ளன. இந்த இலைகளை நீரில் ஊறவிட்டு, மறுநாள் எழுந்ததும் குடித்து வர, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
*கேரட் ஜூஸ் கண்களுக்கு நல்லது. கொழுப்புகளை குறைத்து, மேனியை பளபளப்பாக்குகிறது. கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.
*வெள்ளரி ஜூஸை குடித்துவர உடல் மெலியும். இதில் 90 சதவீத அளவு நீர்ச்சத்து உள்ளதால் உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுவதோடு, தோலை இளமையாக
வைத்திருக்கவும் உதவுகிறது.
*2 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 2 முறை குடித்து வர, கொழுப்புகள் கரையும்.
*பீச் பழ ஜூஸ் குடித்து வர உடல் எடையை குறைக்க உதவும்.
*கரும்பு ஜூஸ் சிறந்த மலமிளக்கியாகவும், உடல் கழிவுகளை நீக்குவதிலும் பெரிதும் துணைபுரிகிறது.
*மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறை சம அளவு கலந்து குடிக்க நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்