பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையே முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது. மற்ற போட்டிகள் சிட்னி மற்றும் ஹோபர்ட் நகரில் வரும் 16, 18 தேதிகளில் நடக்கின்றன.
பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்திலேயே வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் ஜோஷ் இங்லீஸ் தலைமையிலான ஆஸி அணி செயல்படும். அதேசமயம், ஏற்கனவே ஒரு நாள் தொடரை வென்றுள்ள முகமது ரிஸ்வான் தலைமயிலான பாக். அணி, டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்ற முற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரை பொறுத்தவரை, சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸிக்கு கூடுதல் பலம். எனினும் வரும் 2026ம் ஆண்டு உலக கோப்பைக்கு வலுவான அணியை உருவாக்க இரு அணிகளும் தீவிரமாக உள்ளதால் இந்த தொடர் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.