சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் 120 பேருந்துகள் முதல்கட்டமாக இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் யுபிஐ கட்டண வசதி, வழித்தட அமைப்புகளை தெரிவிப்பது போன்ற நவீன தொழில்நுட்பங்களால் இயங்கும் வகையில் வடிவமைப்பு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பாக பயணிக்க வசதி, வீணாக செல்லும் எண்ணெய் செலவையும் குறைத்து, சர்வதேச தரத்திலான ஊரக நகர போக்குவரத்து முறைமை உருவாக்குதல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சிசிடிவி கேமரா, கூடுதல் இருக்கைகள், தொலைபேசிகளுக்கு சார்ஜர் போடும் வசதியென புதிய வசதிகள் இந்த மின்சார பேருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த போக்குவரத்து சேவைக்காக மின்சார சார்ஜிங் நிலையங்கள், பராமரிப்பு மையங்கள், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கான ஸ்மார்ட் வசதிகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளும் பயணித்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு 12 மீட்டர் நீளமுடைய தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 505 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், புதிய மின்சார பேருந்து சேவையின் கட்டணம் வழக்கம் போலவே இருக்கும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.