கூடலூர் : கூடலூர் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தவளை மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடம் மற்றும் ஆகாச பாலம் ஆகிய இடங்களில் நேற்று மாலை மாவட்ட எஸ்பி நிஷா காவல்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் எழிலரசன், கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார், நடுவட்டம் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். தவளை மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் மேல் பகுதியில் சரிந்து விழும் நிலையில் உள்ள பாறையின் தன்மை குறித்தும் போக்குவரத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
எஸ்பி நிஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘தற்போது அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் தவிர பிற வாகனங்களை இரவு நேரத்தில் இந்த சாலையில் இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடுவட்டம் மற்றும் சில்வர் கிளவுட் பகுதிகளில் போலீசார் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக மழை சற்று குறைந்து உள்ள நிலையில் மழையின் தன்மையை பொறுத்து போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும். மேலும் மாற்றுப் பாதை இல்லாததால் இந்த வழியிலேயே அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டி உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பாக வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பு கருதி தாங்களாகவே தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ள பகுதிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து காவல்துறையும் செயல்படும்’’ என தெரிவித்தார்.