ரோம்: நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய ரோமில் உள்ள அவரது நண்பர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். போப் பிரான்சிஸ் (88) இரு நுரையீரலிலும் நிமோனியா தொற்றால் சுவாசப் பிரச்னை ஏற்பட்டு கடந்த 14ம் தேதியிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளார். அவர் குணமடைய உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். போப் ஆவதற்கு முன்பாக பல ஆண்டுகள் முன்பாகவே இத்தாலி ரோம் நகருக்கு பிரான்சிஸ் குடிபெயர்ந்தவர்.
அதோடு, அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு வாடிக்கையாக செல்லும் அவருக்கு நிறைய நண்பர்களும் உள்ளனர். தற்போது போப், வாடிக்கையாளர் என்பதை தாண்டி தங்களின் நல்ல நண்பருக்காக இறைவனை பிரார்த்திப்பதாக போப் பிரான்சின் நண்பர்கள் பலர் கூறி உள்ளனர். மிக எளிய மனிதராக அனைவருடனும் சகஜமாக பழகும் குணமுள்ள பிரான்சிஸ் விரைவில் நலம் பெற்று போப் பணிக்கு திரும்ப வேண்டுமென அவரது நண்பர்கள் வாழ்த்தி உள்ளனர். இதற்கிடையே, போப் பிரான்சிசுக்கு சுவாச பிரச்னைகள் இல்லை என்றும், நுரையீரல் பாதிப்பு குறித்து தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் கூறி உள்ளனர்.