திருவள்ளூர்: நண்பர்களுடன் மனைவி பேசியதை கண்டித்த கணவரின் கையை அடித்துஉடைத்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏகாத்தம்மன் கோயில் தெரு, செஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (37). இவர் கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனா (30). கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி மாமியார் வீடான செஞ்சி காலனிக்கு இரவு 11 மணி அளவில் சதீஷ் சென்றுள்ளார்.
அப்போது மாமியார் வீட்டு அருகில் இருந்த முள் புதரில் சதீஷின் மனைவி மீனா மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் (30), அவரது நண்பர் ஆகியோர் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சதீஷ் சென்று மனைவி மீனாவை அழைத்து, ‘’ஏன் இங்கு பேசிக் கொண்டிருக்கிறாய்’’ என்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து அங்கு கிடந்த கட்டையை எடுத்து செல்வம், அவரது நண்பர் ஆகியோர் சதீஷை சரமாரியாக தாக்கியதில் அவரது வலது கையை உடைந்து விட்டது. இதில் வலியால் அவர் துடித்துக் கொண்டிருந்தபோது, ‘’இந்த விஷயத்தில் தலையிட்டால் உன்னை கொன்று விடுவோம்’ என்று எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து சதீஷை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக சதீஷ் கொடுத்துள்ள புகாரின்படி, கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வம், அவரது நண்பர் தேடி வருகின்றனர்.