ஊட்டி : தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆயுத பூஜை விடுமுறை,வார விடுமுறை என அரசு விடுமுறை தொடர்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் ஊட்டியை சுற்றுலா பயணிகள் மொய்த்தனர். கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர். இதனால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஊட்டி நகரம் சுற்றுலா பயணிகள் வாகனங்களால் தத்தளித்தது.
இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.குறிப்பாக தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,படகு இல்லம்,சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
கடந்த மாதம் ஊட்டியில் மழை பெய்துக் கொண்டிருந்ததால், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையும் என வியாபாரிகள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், இம்மாதம் துவக்கம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், கடந்த ஒரு வாரமாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியுள்ளது. மேலும், வர்க்கி, ஹோம்மேட் சாக்லெட், யூகாலிப்டஸ் தைலம் உட்பட பல்வேறு ஊட்டியில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.