பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று போட்டியில் நேற்று, உலகின் இரண்டாம் நிலை வீரரான அல்காரஸ் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பவுலின் ஆகியோர் அபார வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டி ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் 6-1, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் ஃபேபியன் மரோசனை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி 6-4, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி காலனை வென்றார். இன்னொரு போட்டியில் 7ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-2, 4-6, 1-6, 0-6 என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் நுனோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது வெளியேறினார்.
மகளிர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, 7-6, 7-5 என்ற நேர் செட்டில் ஹங்கேரியின் அன்னா பொண்டாரை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். நான்காம் நிலை வீராங்கனை போலந்தின் ஜாஸ்மின் பவுலின் 6-3, 6-3 என்ற செட்டில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கை வென்றார்.