பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நாளை துவங்குகின்றன. முதல் நாள் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னருடன், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரின்டெர்னெச் மோதுகிறார். பிரபல டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் நாளை துவங்கி, 25ம் தேதி வரை நடக்கவுள்ளன.
நாளை துவங்கும் முதல் நாள் போட்டி ஒன்றில், ஆடவர் பிரிவில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னருடன், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரின்டெர்நெச் மோதுகிறார். இப்போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. நாளை நடக்கும் ஆடவர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளில் உலகின் 2ம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் – ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலகின் 9ம் நிலை வீரர் அலெக்ஸ் டிமினார் – செர்பியாவை சேர்ந்த லாஸ்லோ ஜெரே, ஆஸ்திரேலியா வீரர் ஜோர்டன் தாம்ப்சன் – செக் வீரர் ஜிரி லெஹெக்கா உள்ளிட்டோர் மோதுகின்றனர்.
மகளிர் பிரிவில் நாளை நடக்கும் முதல் சுற்றுப் போட்டிகளில், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலா – ரோமானிய வீராங்கனை அங்கா தோடோனி, உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரசை சேர்ந்த அரீனா சபலென்கா – ரஷ்யாவின் காமிலா ராகிமோவா, அமெரிக்காவை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் – ஆஸி வீராங்கனை ஒலிவியா கடெக்கி உள்ளிட்ட பலர் களம் காண்கின்றனர்.